மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 330 மருத்துவமனைகள் தரம் மற்றும் சிகிச்சை வசதிகளின் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் அப்பல்லோ, விஜயா, ராமச்சந்திரா போன்ற பெரிய தனியார் மருத்துவமனைகள் ஏ1 பிரிவில் உள்ளன.
இதற்கு அடுத்த நிலையில் உள்ள மருத்துவமனைகள், ஏ2, ஏ3, ஏ4, ஏ5 என்று பிரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் சிகிச்சைகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சிறிய அட்டை வழங்கப்படும். ஒருவர் 25 வயதை எட்டினாலோ அல்லது திருமணம் ஆகி விட்டாலோ அவர்கள் தனியாக விண்ணப்பித்து, சிறிய அட்டை அதாவது மருத்துவ காப்பீட்டிற்கான அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கான அட்டையை பெற, கிராம நிர்வாக அதிகாரியிடம் வருமானச் சான்று மற்றும் குடும்ப அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவருடைய பெயரே இரண்டு குடும்பங்களில் இடம் பெறக் கூடாது. குடும்பத் தலைவருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத் தொகை: மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயற்படுத்த அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் மேற் கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு சிகிச்சை செய்த வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 15 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
உதாரணமாக ரூ.1 லட்சம் காப்பீடு தொகை என்றால் அதில் 15 ஆயிரம் ரூபாய் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். 60 ஆயிரம் ரூபாய், மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க பயன்படுத்தப்படும்.
எஞ்சியுள்ள 25 ஆயிரம் ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காகவும், பிரிவுகளின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தலைமை அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட பிரிவு அலுவலகங்களிலும் செயற்படும்.
இது தொடர்பான விவரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 1800 425 3993 |
0 comments: on "தமிழகம் முழுவதும் 330 மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் ஏற்பாடு"
Post a Comment