தலைப்புச் செய்தி

Saturday, December 24, 2011

நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அறிக்கை: பாகிஸ்தான் இராணுவம் நிராகரிப்பு


பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீதான நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் ஆய்வறிக்கையை பாகிஸ்தான் இராணுவம் நிராகரித்து விட்டது.
இதனால் இருதரப்பு உறவுகள் மீண்டும் சீர் குலையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி இரு பாகிஸ்தான் சாவடிகள் மீது நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.
இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்தது. மேலும் விசாரணைக் குழுத் தலைவர் ஸ்டீபன் க்ளார்க் அமெரிக்க இராணுவ மையமான பென்டகனுக்கு அளித்த விசாரணை அறிக்கையில், இரு தரப்பிலும் தவறான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதால் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்ததாகவும், அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை குறித்து பாகிஸ்தான் இராணுவம் நேற்று(23.12.2011) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் பல உண்மைகள் விடுபட்டுப் போயுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கை அதிகாரிகளின் கைகளுக்கு வந்தவுடன் பாகிஸ்தான் இராணுவம் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தரப்புத் தான் முதலில் நேட்டோ படைகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆப்கானில் உள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேட்டோ தரப்பில் பலி எதுவும் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் தரப்பிற்கு நேட்டோ தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்ட பின்னும் தாக்குதல் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடிப் பேட்டியால் நேட்டோ விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கும் எனவும், அமெரிக்கா, பாகிஸ்தான் தரப்பு உறவு சீர் குலையலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அறிக்கை: பாகிஸ்தான் இராணுவம் நிராகரிப்பு"

Post a Comment