தலைப்புச் செய்தி

Friday, December 30, 2011

பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதாயங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.

இது கல்வித்துறை  இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்விக குடிகள் என்று பரப்ப வேண்டும் என்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய வரலாறு பாடப்புத்தகத்தை திரும்பி பெற்றது. இந்தப் புத்தகத்தில் ஆரியர்கள் இந்தியாவில் வந்தேறியவர்கள் என்பதை ஆதாரத்துடன் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையே பா.ஜ.கட்சி மாற்றியது. அந்த இடங்களில் நடுநிலை வரலாற்று ஆசிரியர்களை நீக்கி விட்டு, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என பொய்யான வரலாறு எழுதிய பி.எல்.குரோவர் என்ற பேராசிரிய‍ரையும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான வரலாற்று பேராசிரியர்களையும் நியமித்தது. இது தவிர தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக (என்.சி.ஈ.ஆர்.டி) உறுப்பினர்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றியது.

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்பதற்காக கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பா.ஜ.கட்சி முயற்சி செய்தது. ஏற்கனவே ஆங்கில கிறிஸ்தவர்களின் முஸ்லிம் விரோத ஒரு பக்க சார்பு வரலாற்றைப் போல, ஹிந்துத்துவா சக்திகளும் தங்கள் பங்குக்கு முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்‍கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தன. இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரும், இயற்பியல் துறை பேராசிரியருமான முரளி மனோகர் ஜோஷியை நியமனம் செய்தது.

இந்த நிலையில், பா.ஜ.கட்சியின் மதவாத சிந்தனைக்கு அனைத்து மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இன்று வரை திருத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான பாசிச ஹிந்துத்துவா தயாரித்த வரலாறு, பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ. ஆட்சியின் போது மதுரை காமாராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அதிக பணம் தருகிறது என்ற காரணத்துக்காக ஜோதிடவியல் படிப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போதைய தி.மு.க அரசு மற்றும் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால் அந்தப் பாடம் வாபஸ் பெறப்பட்டது.

அதேபோல, கல்விஅமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக கல்வி அமைச்சர் க.அன்பழகன் சரஸ்வதி வந்தனம் பாடுவது உள்ளிட்ட வரலாற்று திரிபுகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே, தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு சமூக அறிவியில் பாடத்திற்கான எந்தத் தகுதியும் இல்லாத ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை (சர்டிபிகேட் மற்றும் டிப்ளமோ) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை வன்னமயாக கண்டிக்கிறோம். ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜோதிட பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவதென்பது போலி சமூக அறிவியலான ஜோதிடத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பதும், மவுட்டீகத்தை வளர்ப்பதுமாகும்.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலைக்கழக கல்விப்பேரவை மற்றும் ஆட்சிப்பேரவையில் விவாதிக்காமல் ஜோதிட பாடங்களை மீண்டும் கொண்டுவருவது ஆற்றல்சால் பல்கலைக்கழகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. எனவே ஜோதிடபாடப்பிரிவுகளை கொண்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவியல் உணர்வினை உயர்த்தி பிடிப்பது அரசியல் சாசன கடமை என்பதையும் உணர வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!"

Post a Comment