ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சதாம் உசேன் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து வெளியேற்றிய அமெரிக்க இராணுவம் அந்நாட்டிற்குள் நுழைந்தது.
கடந்த ஒன்பதாண்டுகளில் 4,500 அமெரிக்க வீரர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்களும் பலியாகியுள்ளனர். இந்தப் போருக்காக அமெரிக்கா 800 பில்லியன் டொலரை செலவழித்துள்ளது.
போரின் உச்சக்கட்டத்தில் ஈராக்கில் ஒரு லட்சத்து, 70 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா குவித்தது. அந்நாட்டின் 500 இடங்களில் இராணுவ தளங்களை அமைத்தது. எனினும் போருக்கான நோக்கங்கள் நிறைவேறியதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
திட்டமிட்டபடி கடந்தாண்டில் இருந்தே ஈராக்கின் பல பகுதிகளின் பாதுகாப்பு அமெரிக்கப் படையிடம் இருந்து ஈராக் பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டு வந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கப் படைகள் இந்தாண்டின் இறுதிக்குள் ஈராக்கில் இருந்து வெளியேறும் என அறிவித்தார்.
படிப்படியாக அமெரிக்கப் படைகளும் வெளியேறி வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம்(17.12.2011) அமெரிக்கப் படையின் 100 ஆயுத வாகனங்களில் 500 வீரர்களைக் கொண்ட கடைசிப் பிரிவு ஈராக்கில் இருந்து புறப்பட்டது.
ஒரே நாள் இரவில் அப்படை ஈராக்கின் பாலைவனத்தைக் கடந்து குவைத்திற்குள் நுழைந்தது. இதே வழியாகத்தான் கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன் அமெரிக்கப் படை ஈராக்கிற்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 157 வீரர்கள் மட்டுமே உள்ளனர். தூதரகப் பாதுகாப்பிற்காக கடற்படையின் ஒரு பிரிவும் அங்கு தங்கியுள்ளது.





0 comments: on "அமெரிக்காவின் கடைசி இராணுவப் பிரிவும் ஈராக்கிலிருந்து வெளியேறியது"
Post a Comment