தலைப்புச் செய்தி

Wednesday, December 28, 2011

லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேறியது


புதுடெல்லி:லோக்பால் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நிறைவேறியது. அரசு கொண்டுவந்த 2 திருத்தங்களுடன் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால், லோக்பால் அமைப்புக்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து தருவதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள், அ.இ.அ.தி.மு.க, பி.ஜே.டி கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அறிமுகப்படுத்தப்பட்டு 43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட லோக்பால் மசோதா தொடர்பாக காரசாரமான விவாதம் மக்களவையில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.
லோக் ஆயுக்தா அமைப்பது கட்டாயம் என முதலில் கூறப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, ராணுவம், கடலோரக் காவல்படை ஆகியவற்றை லோக்பால் வரம்பிலிருந்து நீக்குவதற்கும் திருத்தம் செய்ய அரசு ஒப்புக் கொண்டது.
பிரதமரை விசாரிக்க லோக்பால் உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றிருந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் போதும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி வாக்கெடுப்புக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் லோக்பால் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பெரிய தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமெனில் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.
ஆனால், இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டினார். இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.
ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதா தோல்வியடைந்ததது குறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில்; ‘அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தந்து லோக்பால், லோக் ஆயுக்தவை வலுப்படுத்துவதுதான் இந்த
மசோதாவின் நோக்கம். ஆனால், இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவே காரணம். ஆளும்கட்சிக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடித்துவிட்டன. இது ஜனநாயகத்துக்கு சோகமான நாளாகும். மக்கள் உங்களுக்கு (எதிர்க்கட்சிகள்) பாடம் புகட்டுவார்கள்’ என்றார்.
நியூஸ்@தூது 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேறியது"

Post a Comment