தலைப்புச் செய்தி

Saturday, December 31, 2011

தானே புயல் கரையை கடந்தது: 40 பேர் பலி


இந்திய மாநிலமான தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தானே புயலுக்கு 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான தானே புயல் புதுச்சேரி மற்றும் கடலூருக்கு இடையே நேற்று(30.12.2011) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கு(இந்திய நேரம்) இடையே கரையைக் கடந்துள்ளது.
தற்போது இது பலவீனமடைந்த தீவிர காற்றழுத்த மண்டலமாக கடலூர், புதுச்சேரி இடையே நிலை கொண்டுள்ளது. மேலும் பலவீனமடைந்து மேற்கு நோக்கி இது நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


நேற்றுமுன்தினம்(29.12.2011) மாலை தானே புயல் புதுச்சேரியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. அது புதுச்சேரி-கடலூர் இடையில் உள்ள கடலோரத்தை நோக்கி நகரத் தொடங்கியதன் காரணமாக நேற்று மாலையில் இருந்தே புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கடலூர் அருகே தானே புயல் கரையைத் தொட்டது. இதையடுத்து காலை 6.30 மணி அளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது.


140 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் புதுச்சேரியிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்தன. புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.
சூறாவளி காற்று காரணமாக கடல் பல மீட்டர் உயரத்துக்கு பொங்கி ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 


புதுவையில் வம்பாகீரப்பாளையம், குருசுக்குப்பம், தமிழக கடலோரப் பகுதிகளான சின்ன முதலியார்சாவடி, பிள்ளைச் சாவடி, காலாப்பட்டு பகுதிகளில் ஊர்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.


இந்த புயலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் தனியார் செல்போன் டவர்களும் சேதம் அடைந்துள்ளதால் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி ஆரோவில் பகுதியில் சுமார் ஆயிரம் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் முக்கிய சாலைகளில் நிறைய மரங்கள் விழுந்ததால் இரண்டு சக்கர வாகனத்தில்கூட போக முடியாத நிலை ஏற்பட்டது. கடலோரம் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.


கடலூர், திண்டிவனம், சிதம்பரம், விழுப்புரம் செல்லும் முக்கிய சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. புதுச்சேரி, கடலூரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. நேற்றிரவு முதல் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது. புயலால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.


இப்போது புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்வதால், திருவண்ணாமலை, தருமபுரி, பெங்களூர் உட்பட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புயல் பாதிப்பு குறித்து அறிய எண்கள்: புயல் பாதிப்பு குறித்து அறிய சென்னை வானிலை ஆய்வு மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை தவிர்த்த மக்கள் 1800 எண்ணிலும் தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களைக் கேட்கலாம். மேலும் சென்னை மாநகராட்சி தகவலுக்கு எண் 1913, திருவள்ளூர் மாவட்ட தகவலுக்கு 27661200 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தானே புயல் கரையை கடந்தது: 40 பேர் பலி"

Post a Comment