இந்தியாவில், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களை முறைப்படுத்த பிரஸ் கவுன்சில் அமைப்பு இருக்கும் நிலையில், காட்சி ஊடகங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதால், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
காட்சி ஊடகங்கள் தங்களைத் தாங்களே நெறிப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதால், அந்த ஊடகங்களும் ஓர் அமைப்பின் நெறிப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி சேனல்கள், பிரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் வர விரும்பாவிட்டால், தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு அமைப்பின் நெறிப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் கட்ஜு. தேசிய ஊடக தினம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது கட்ஜு இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
ஊடகங்கள், தங்களைத் தாங்களே முறைப்படுத்திக் கொள்வதாகக் கூறினால், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் அதே கொள்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
"தங்களைத் தாங்களே முறைப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறுவது, ஒன்றும் செய்வதில்லை என்று பொருள். நீங்கள் மட்டும்தான் ஞானிகள் மற்றவர்கள் எல்லாம் பாவிகளா? அப்படியானால், பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் செய்திகளுக்கு என்ன அர்த்தம்? நீரா ராடியே ஒலி நாடாக்கள் மூலம் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு என்ன அர்த்தம்?" என்று ஊடகங்களிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் கட்ஜு.
அதே நேரத்தில், ஊடங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை எப்போதும் தான் ஆதரிக்கவில்லை என்று கட்ஜு குறிப்பிட்டார். ஊடகவியாளர்கள், தவறு செய்யும் பட்சத்தில், அவர்களிடம் விவாதித்து, தவறை உணர வைக்க முடியும் என்றார் நீதிபதி கட்ஜு.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும், காட்சி ஊடகங்களை முறைப்படுத்த ஓர் அமைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.
0 comments: on "காட்சி ஊடகங்களை முறைப்படுத்த ஓர் அமைப்பு அவசியம்-மார்க்கண்டேய கட்ஜு"
Post a Comment