தலைப்புச் செய்தி

Saturday, November 12, 2011

பெண் சிசுவைக் கொன்ற தந்தைக்கு தூக்கு


பெண் சிசுக் கொலை புரிந்த தந்தை ஒருவருக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற நபர் பிறந்த மூன்றே நாளான தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக் கொலைக்கு எதிரான கடுமையான ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட வேண்டும் என்பதால் இந்த தண்டனை அளிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவரது மனைவி மூன்றாவதாக ஒரு பெண்ணை பெற்றெடுத்தால் அவர் இந்த செயலை செய்யதாகவும் அரச வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இது போன்ற கடுமையான தண்டனைகள் சிசுக் கொலைகள் மற்றும் பாலியல் தேர்வு அடிப்பைடியிலான கருக்கலைப்புக்களை தடுக்கு உதவாது என பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் ரூபா தமிழோசையிடம் தெரிவித்தார்.
மதுரையில் பணிபுரியும் ரூபா, இந்தப் பிரச்சனையை சமாளிக்க சமூக விழிப்புணர்வு தேவை என்கிறார். வரதட்சணை தடுப்பு சட்டங்கள் கடுமையாக செயல்படுத்தப் படவேண்டும் என்றும் பெண் சிசுவை கருக்கலைப்பு செய்ய உதவியாக இருக்கும் ஸ்கேனிங் மையங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மதுரையை சுற்றிய பகுதிகளிலும், மேற்கே சில பகுதிகளிலும் குறிப்பிட்ட சில ஜாதியினரிடம் இருந்த பெண் சிசுக் கொலை வழக்கம் தற்போது கிராமப் புறங்களில் பல்வேறு சமூகத்தினரிடையே காணப்படுவதாகவும் ரூபா தெரிவித்தார்.
இந்தியக் குற்றவியல் நடைமுறைகளின் படி, ஒரு வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டால், அந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்தால் மட்டுமே தண்டனை நிறைவேற்றப்படும்.
அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
பெண் சிசுக் கொலை மற்றும் கருக்கலைப்பு போன்றவை இந்தியாவில் அதிகம் நடப்பதன் காரணமாக மொத்த மக்கள் தொகையில் பெண்களின் விகிதாச்சாரம் தொடர்ந்து குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பெண் சிசுவைக் கொன்ற தந்தைக்கு தூக்கு"

Post a Comment