பாகிஸ்தானில் எல்லைப் பகுதியில் நேட்டோ படைகளின் தாக்குதலில் 25 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானால் குற்றஞ்சாட்டப்படும் நிகழ்வானது அமெரிக்க- பாகிஸ்தான் உறவுகளில் மீண்டும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கான பதிலடியாக நேட்டோவுக்கான விநியோகங்கள் எதுவும் பாகிஸ்தானின் ஊடாகச் செல்லக்கூடாது என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள தளத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதனை ஒரு கடுமையான பதிலடியாக ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.
அமெரிக்காவுடனும், நேட்டோவுடனும் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச பாதுகாப்புப் படையினருடனுமான, இராஜதந்திர, அரசியல், படைத்துறை மற்றும் உளவுத்துறை சம்பந்தமான உறவுகளை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் பாகிஸ்ததான் அறிவித்துள்ளது.
தெற்காசியாவில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தமது நடவடிக்கைகளை வெற்றிகரமாகத் தொடருவதற்கு பாகிஸ்தானின் அனுசரணை அவசியம் என்ற காரணத்தால், இந்த பதற்ற நிலையை தணிப்பததற்கு அமெரிக்க அதிகாரிகளின் சார்பில் சில சுமூக முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளினால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை பாகிஸ்தான் அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு தனது அனுதாபங்களை கூறியுள்ளது.
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், பாதுகாப்புச் செயலர் லியோன் பனெட்டா, மற்றும் ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளின் தளபதி ஆகியோர் தொலைபேசி மூலம் பாகிஸ்தானிய தரப்பினருக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த அனுதாப கூட்டு அறிக்கைக்கோ அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கோ பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவிதமான பதில் கருத்தும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளைப் பொறுத்தவரை அவை இரண்டுக்கும் ஒன்றுக்கு அடுத்தது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள இராணுவ ஆய்வாளரான டாக்டர் ஹசன் அஸ்காரி றிஷ்வி அவர்கள், ஆனால், இந்த தாக்குதலானது, அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் பாகிஸ்தானின் செயற்பாட்டை சிரமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இப்படியான அமெரிக்க நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பாதிக்கப்படுவதும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் கடுமையான பதில் நடவடிக்கையை எடுப்பதும் இது ஒன்றும் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இப்படியான சூழ்நிலைகள் உருவாகி, பின்னர் தணிந்துள்ளன.
குர்ரான் பழங்குடியின பகுதியில் 2010 இல் அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் இரு சிப்பாய்களை கொன்றபோதும் இப்படியான நிலை ஏற்பட்டிருந்தது.
அப்போது 11 நாட்களுக்கு விநியோகப் பாதையை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியிருந்தது.
ஆனால் தற்போது உருவாகியுள்ள நிலைமையை இந்த இரு நாடுகளும் எவ்வாறு சமாளிக்கப்போகின்றன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
நேட்டோ படைகளுக்கான 40 வீதமான விநியோகம் பாகிஸ்தானின் ஊடாகவே செல்வதாக அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
மத்திய ஆசியாவினூடாக ஒரு விநியோகப் பாதையை ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது மிகவும் கடடினமான. இடையூறுகள் மிக்க பாதையாகும் .
இது பாகிஸ்தானுக்கும் தெரியும். இதன் காரணமாகத்தான் ஒருவேளை, இது குறித்த முடிவுகளுக்காக பாகிஸ்தானின் அமைச்சரவை கூடிய போது, விநியோகப்பாதையை நிரந்தரமாக மூடாமல், காலவரையின்றி இடைநிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கலாம்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேறச்சொல்வது கூட புதிய விசயமல்ல.
அரசியல், இராஜதந்திர, படைத்துறை உறவுகளை மீளாய்வு செய்யப்போவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
ஆப்கான் பிரச்சினைக்கு சமரச தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற முடிவு செய்யலாம்.
அதன் மூலம் பொண் நகரில் நடக்கவிருக்கும் மாநாட்டை பாகிஸ்தான் பகிஸ்கரிக்கலாம். தான் செல்வாக்குச் செலுத்தும் ஆயுதக்குழுக்களையும் அந்த மாநாட்டுக்கு கொண்டுவருவதையும் அது தவிர்க்கலாம்.
அதற்கு பதிலாக அமெரிக்காவும் பாகிஸ்தானுக்காக இராணுவ உதவிகளில் மேலும் வெட்டை செய்ய முடியும். ஏனெனில் பாகிஸ்தான் பெரும்பாலும் முழுதாகவே அமெரிக்க பாதுகாப்புத்துறை தயாரிப்புகளிலேயே தங்கியிருக்கிறது.
மொஹ்மண்டில் நடந்த இந்தத்தாக்குதலைப் போன்றவை பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க ஆதரவு சக்திகள், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற விடயத்துக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்குவதை சிரமமாக்கும் அதேவேளை, அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த விடயத்தில் அமெரிக்கா தனது தர்மசங்கடத்தை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதிலேயே தங்கியிருக்கப்போகிறார்கள்.
0 comments: on "சீர்கெடும் அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகள்"
Post a Comment