இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் புதிய திருப்பமாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நடந்தததாகக் கூறப்படும் முறைகேடு குறித்தும் விசாரணை விரிவடைந்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, பாஜகவின் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தொலைத் தொடர்புத்துறை செயலராக இருந்த ஷியாமள் கோஷ், துணை இயக்குநராக பணியாற்றிய ஜே.ஆர். குப்தா மற்றும் ஏர்டெல், வொடாஃபோன் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது மத்தியப் புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2001 மற்றும் 2007-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால், அரசுக்கு சுமார் 508 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஷியாமள் கோஷ் மற்றும் ஜே.ஆர். குப்தா ஆகிய இருவரும், சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், தங்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
கிரிமினல் சதித்திட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரமோத் மகாஜன் காலமாகிவிட்டதால், அவரை விசாரணை வரம்பிலிருந்து நீக்கிவிட்டதாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால், அவசரமாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில், அவரும் கிரிமினல் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. பிரமோத் மகாஜன், கடந்த 2001 முதல் 2003-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்.
இதனிடையே, பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராமுக்கு, ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
1996-ம் ஆண்டு தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, கேபிள் ஒப்பந்தம் கொடுத்ததற்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு சிறை தண்டனையுடன், நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
86 வயதான சுக்ராம், உடனடியாக கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
0 comments: on "ஸ்பெக்ட்ரம் ஊழல்: பாஜக ஆட்சி மீதும் விசாரணை"
Post a Comment