தலைப்புச் செய்தி

Saturday, September 3, 2011

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்


இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
அன்னாவின் உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வேளையில், மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பெண்ணின் பெயர் இரோம் சர்மிளா. மணிப்பூர் மக்களின் நலனுக்காக, ராணுவத்தின் அட்டகாசத்தை எதிர்த்து குரல் கொடுப்பதில் முன்னணியில் உள்ளவர் இவர். மணிப்பூரில் பிரிவினைவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படைக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்தது மத்திய அரசு.
இதுதொடர்பாக சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, ராணுவ வீரர்கள் யாரும், சாதாரண மக்களை கைது செய்யலாம்; பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை செக்ஸ் ரீதியாக சித்ரவதை செய்வதும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். அவர் 3765-வது நாளாக பட்டினி கிடந்து வருகிறார். அவர் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். ஆண்டுக்கணக்கில் பாதுகாப்பு படையினர் அவரை காவலில் வைத்துள்ளனர்.
அவரை அன்னாவின் ஆதரவாளர்கள் சிலர் அணுகி, நீங்களும் அன்னாவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், சர்மிளாவால் போக முடியவில்லை.
அன்னாவின் உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திய நிலையில், இவரின் 11 ஆண்டு கால பட்டினிப்போராட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே, ஓசைப்படாமல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான சாமியார், கங்கை தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவர் இறந்த பின்புதான் மீடியாக்களின் வெளிச்சமே அவர் பக்கம் திரும்பியது.
இதுபோல, அன்னாவின் உண்ணாவிரதத்துக்கு பின்புதான் மணிப்பூர் இரும்புப் பெண் 11 ஆண்டாக உண்ணாவிரதம் இருந்த விவரம் மீடியாக்களின் கவனத்துக்கு வந்துள்ளது.
அவரை அணுகி கேட்டபோது, மணிப்பூரில் உள்ள மக்களின் நிலை பற்றி வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004 ம் ஆண்டு வந்து சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அவர் வாய்திறக்கவே இல்லை என்று இரோம் வருத்தப்பட்டார்.
அன்னாவின் போராட்டம் பற்றி கூறுகையில், அவர் போராட்டம் செயற்கை தனமானது. என்னையும் கூப்பிட்டனர். ஆனால், நீதிமன்ற காவலில் உள்ள நான் எப்படி போக முடியும்? அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன் என்றும் இரோம் தெரிவித்தார்.
காஷ்மீர் வாருங்கள் அன்னா!
காஷ்மீரில் வந்து போராட்டம் செய்யும்படி அன்னாவுக்கு காஷ்மீர் மிதவாத ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வியாஸ் பரூக் அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் மனித உரிமை கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையிடம் விசாரித்தபோது, அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளனர் என்று கூறியிருந்தது.
இதை சுட்டிக்காட்டிய மிர்வியாஸ், அன்னா எங்களின் கோரிக்கையை ஏற்று, இப்படி அப்பாவிகள் கொல்லப்படுவதை தட்டிக்கேட்க எங்களுடன் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எங்கள் பிரச்னையை தீர்க்க வரட்டும் என்கிறார்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்"

Post a Comment