காவல்துறை அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில், நேற்று விநாயகர் சிலைகளை வைத்து இளைஞர்கள் வழிபட்டனர். வாழப்பாடி பேருந்து நிலையம் அருகிலுள்ள மசூதி தெருவை சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்தனர்.
அதற்காக, தெருவின் கடைகோடியில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த வாழப்பாடி காவல்துறையினர் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி பெறவில்லை. எனவே, சிலை வைக்கக் கூடாது என, எச்சரித்துள்ளனர். அதனால், சிலை வைப்பதை கைவிட்ட இளைஞர்கள், அதற்காக போடப்பட்ட பந்தல் மற்றும் மேடையை பிரித்து அப்புறப்படுத்தினர்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குமார்(21), விக்னேஷ்(19) மற்றும் ராஜ்குமார்(19) ஆகிய மூவரையும் கைது செய்த வாழப்பாடி காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். அனுமதியின்றி அத்துமீறி விநாயகர் சிலை வைத்து பிரச்சனை உண்டாக்க முயற்சித்த இளைஞர்கள் மூவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பது மசூதி தெருவில் வசிக்கும் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments: on "விநாயகர் சிலை வைத்து பிரச்சனை உண்டாக்க முயற்சி"
Post a Comment