கர்நாடக புதிய முதல்வராக சதானந்த கவுடா வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்.
கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்ற சதானந்த கவுடா பின்னர் கவர்னர் பரத்வாஜை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
சட்டமன்ற பாஜக தலைவராக தாம் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும் அவர் அளித்தார். இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான அனுமதியை கவர்னர் அளித்தார், எனவே வெள்ளிக்கிழமை சதானந்தா புதிய முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.
கர்நாடக ஆளுங்கட்சியான பாஜகவில் மொத்தம் 121 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏக்களிடம் இன்று ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் சதானந்த கவுடாவுக்கு 62 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிராக போட்டியிட்ட ஜகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக 55 வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து சதானந்த கவுடா புதிய முதல்வராகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர் தாற்காலிக முதல்வர் எடுயூரப்பாவின் தீவிர ஆதரவாளராவார். எனவே இவரை எடியூரப்பாவின் ரப்பர் ஸ்டாம்ப் என்று எதிர்க்கட்சியினர் வர்ணித்தனர்.
கர்நாடகத்தில் சட்ட விரோத சுரங்க ஊழலில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் பாரதீய ஜனதாவுக்கு தனது கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி ஊழல் புகாருக்கு ஆளானது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து எடியூரப்பாவை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டது. ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வந்த அவர் கட்சி தலைமையின் மிரட்டலால் நீண்ட போராட்டத்துக்குப் பின் ராஜினாமா செய்தார். அவர் தனது ஆதரவாளர் ஒருவரையே முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
எடியூரப்பா ராஜினாமா பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்-மந்திரி பதவிக்கு எடியூரப்பா தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை சிபாரிசு செய்தார். இவர் உடுப்பி-சிக்மகளூர் தொகுதி எம்.பி. ஆக இருக்கிறார். இவருக்கு எடியூரப்பா எதிர்ப்பு கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமார், மாநில பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா தலைமையில் ஓர் அணியாக திரண்டனர்.
தங்கள் சார்பில் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை அவர்கள் சிபாரிசு செய்தனர். புதிய முதல்-மந்திரியை ஏகமனதாக தேர்வு செய்யும் முயற்சியில் மேலிட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 31-ந் தேதியே முதல்-மந்திரி தேர்வு நடப்பதாக இருந்தது. ஒருமித்த கருத்து ஏற்படாததால் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக மேலிட தலைவர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, அருண்ஜெட்லி ஆகியோர் நேற்று பெங்களூர் வந்தனர். ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் எடியூரப்பா, அனந்தகுமார் ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசினார்கள். சதானந்த கவுடாவுக்கு முதல்-மந்திரி பதவியும், ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்-மந்திரி பதவி அளிப்பது என்றும் மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதாக நேற்று மாலை தகவல் வெளியானது. ஆனால் இதை ஏற்க அனந்தகுமார் ஆதரவாளர்கள் பின்னர் மறுத்து விட்டனர்.
இதனால் முதல்-மந்திரியை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி தேர்வு செய்வது என முடிவானது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரில் தொடங்கியது. மேலிட தலைவர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட 121 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
வாக்கெடுப்பு முடிவில் சதானந்தாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. ஆயினும் 55 எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்ற ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





0 comments: on "கர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார் சதானந்த கவுடா"
Post a Comment