லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக நடந்த கடாபி ஆட்சிக்கு எதிராக வெகுண்டு எழுந்த மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 6 மாதமாக நடந்த இந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. மக்களின் புரட்சிப்படை தலைநகர் திரிபோலியை நேற்று முன்தினம் கைப்பற்றியது.
ராணுவத்தின் முக்கிய தளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடாபியின் மகன்கள் சயீப் அல்-இஸ்லாம், முகம்மது ஆகிய 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் கடாபியின் 41 ஆண்டு கால அராஜக ஆட்சி வீழ்ந்தது.
லிபியா புரட்சிபடையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் கடாபி தலை மறைவாகி விட்டார். எங்கு பதுங்கி இருக்கிறார் என தெரியவில்லை. தஜுரா இருதய ஆஸ்பத்திரியில் பதுங்கி இருக்கிறார். பால்கல் அஜீஜீயாவில் தனது மாளிகையில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் வெளி நாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று தென் ஆப்பிரிக்கா லிபியாவுக்கு 2 விமானங்களை அனுப்பியது. அதில் கடாபியும் அவரது குடும்பத்தினரும் தப்பி இருக்கலாம் என கருதப்பட்டது.
அதை தென்ஆப்பிரிக்கா வெளியுறவு மந்திரி மைட் சோனா மாசாபென் மறுத்துள்ளார். லிபியாவில் இருந்து தனது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அழைத்து வரவே அரசு விமானங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே கடாபி வெனிசுலா தப்பி சென்று அங்கு தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியானது. அதுவும் பொய் என்று பின்னர் நிரூபனமானது. அங்கோலா, கினியா, ஜிம்பாப்வே, துனிசியா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு அவர் தப்பி சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே அவர் லிபியாவில் பதுங்கியிருக்கிறாரா? என்று புரட்சிபடை தீவிரமாக தேடி வருகிறது. கடாபி எங்கு இருந்தாலும் அவர் சரண் அடைய வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடாபியின் ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து லிபியாவுக்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
லிபியாவின் சொத்துக்களை இங்கிலாந்து அரசு முடக்கி வைத்திருந்தது. கடாபி ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து அவற்றை மீண்டும் புரட்சி படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி விவாதித்து அடுத்த கட்ட திட்டத்தை அறிவிக்க பிரான்ஸ் முடிவெடுத்துள்ளது. பெங்காசிக்கு ஒரு நிபுணர் குழுவை அனுப்ப இத்தாலி முடிவு செய்துள்ளது. போரின் போது சீரழிந்த எண்ணை மற்றும் இயற்கை வாயு தயாரிப்பு நிறுவனங்களை புனரமைக்க உதவி செய்ய முடிவெடுத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் கத்தார், அரபு ஐக்கிய நாடுகளின் தலைவர்களுடன் பேசினார்.
எண்ணை வள நாடுகளில் லிபிபாவும் ஒன்றாக திகழ்கிறது. போருக்கு முன்பு நாள் ஒன்றுக்கு இங்கிருந்து 1 கோடியே 60 லட்சம் பேரல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. போருக்கு பின் அது 1 கோடி பேரலாக குறைந்து விட்டது.
இதனால் எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 106 அமெரிக்க டாலராக உயர்ந்தது. போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து எண்ணை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 comments: on "நாட்டை புரட்சிப் படை பிடித்ததால் லிபியா அதிபர் கடாபி வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்"
Post a Comment