தலைப்புச் செய்தி

Monday, August 8, 2011

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது


2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.
2006-ஆம் ஆண்டு பராஅத் தினத்தில் முஸ்லிம்கள் மலேகான் மஸ்ஜிதிலிருந்து வெளியே வரும் வேளையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதில் 38 அப்பாவிகள் கொலைச் செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை 13 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது. இவர்களில் முஹம்மது அலி, ஆஸிஃப் கான், ஜாவேத் ஷேக், ஸல்மான் ஃபாரிஸி, ஷபீர் அஹ்மத், ரஈஸ் அஹ்மத், டாக்டர் ஃபாரூக் அன்ஸாரி, அப்ரார் அஹ்மத், நூருத்துதா தோஹா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், கடந்த ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுவாமி அஸிமானந்தா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் மலேகான், அஜ்மீர், சம்ஜோதா குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கில் திருப்பு முனை ஏற்பட்டது.
2008-ஆம் ஆண்டு நடந்த 2-வது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நேர்மையான அதிகாரியான மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பிரக்யாசிங் தாக்கூர், தயானந்த் பாண்டே, ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்டோரை கைதுச் செய்தார். இவ்வழக்கிலும் முதலில் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதும், இன்னொரு வழக்கின் ஆதாரத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் அனுமதிக்க இயலாது என சுட்டிக்காட்டி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2010 ஆம் ஆண்டு மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையிடமிருந்து இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்திருந்தாலும் தொடர் விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் ஜாமீன் மனு அளிக்கும்போது அதனை எதிர்க்கவேண்டாம் என்ற முடிவுக்கு என்.ஐ.ஏ வந்ததாக கருதப்படுகிறது.
இவ்வழக்கில் கர்னல் புரோகித்தையும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளது. இவ்வழக்கில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு நிரூபணமானதைத் தொடர்ந்து முன்னர் இவ்வழக்கை விசாரித்து அப்பாவிகளை சிறையில் அடைத்த ஏ.டி.எஸ்ஸும், சி.பி.ஐயும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவர்.
செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலைச் செய்யக்கோரி பல்வேறு அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் களமிறங்கியிருந்தன.


News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது"

Post a Comment