தலைப்புச் செய்தி

Tuesday, May 10, 2011

பின்லேடனின் மனைவிகளை ஒப்படையுங்கள்: பாகிஸ்தானிடம் யு.எஸ். கோரிக்கை

மே 9: அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மனைவி மூவரையும் விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.


பின்லேடன் தங்கியிருந்த சொகுசு விடுதியில் இருந்து வீடியோ கேசட் உள்பட முக்கியமான ஆவணங்களை எங்களது நாட்டு கமாண்டோ வீரர்கள் கைப்பற்றி வந்துவிட்டனர். ஒருவேளை அங்கு வேறு ஏதாவது ஆவணங்கள் கிடைத்திருப்பின் அதையும் ஒப்படையுங்கள் என்றும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா கேட்டுள்ளது.


ஆனால் இதற்கு பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளது.


பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டுக்கு விருப்பமில்லை என்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து நேரடியாகப் பதில் கிடைக்கவிட்டாலும் பின்லேடனின் மனைவிகளை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளது அமெரிக்காவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.



பின்லேடன் யேமன் நாட்டைச் சேர்ந்த தனது இளைய மனைவியான அமல் அகமது அப்துல் ஃபாட்டாவுடன்தான் மிக நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அவரது சதி செயல்கள் குறித்து ஃபாட்டாவுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. இதனால் அவரை மட்டுமாவது பாகிஸ்தானிடம் இருந்து பெற்று விசாரிக்க விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு இசைந்து கொடுக்காது என்று அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அபோட்டாபாத்தில் சொகுசு விடுதியில் பின்லேடன் கொல்லப்பட்டதுமே அங்கிருந்து அவரது மனைவிகள், குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இப்போது பாகிஸ்தான் ராணுவக் காவலில் உள்ளனர். பின்லேடனை சுடும் போது அவரது இளைய மனைவி அமல் குறுக்கே புகுந்து தடுத்துள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.


அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக யேமனுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் தியார் கான் குறிப்பிட்டுள்ளார்.



பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இதனிடையே, பின்லேடனுக்கு பாகிஸ்தான் உதவியது உறுதியானால் அந்நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோம் டோனிலனிடம் கேட்டதற்கு, சிறிது நேரம் மெüனமாக இருந்தார். பின்னர் இதுபோன்ற கற்பனையான கேள்விக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்றார்.



முதலில் உண்மையைக் கண்டறிவோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பின்லேடனின் மனைவிகளை ஒப்படையுங்கள்: பாகிஸ்தானிடம் யு.எஸ். கோரிக்கை"

Post a Comment