தலைப்புச் செய்தி

Saturday, May 14, 2011

29 இடங்களில் வெற்றி: விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 29 தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றி பெற்றுள்ளது.   தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் 30 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தே.மு.தி.க. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாபா. பாண்டியராஜன், அனகை முருகேசன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
 
தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் தே.மு.தி.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்திருந்த தே.மு.தி.க. தற்போது கூடுதலாக 28 இடங்களைக் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வை, 3-வது இடத்துக்கு தே.மு.தி.க. தள்ளியுள்ளது.
 
29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் சட்டசபையின் முக்கிய எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை தே.மு.தி.க. பெறுகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை ஒரு கட்சி பெறுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களை பெறும் கட்சியே எதிர்க்கட்சி வரிசையில் அமர முடியும். அதோடு எதிர்க்கட்சி என்ற சிறப்பை பெற சட்டசபை மொத்த உறுப்பினர்களில் 10 சதவீத இடத்தை பெற்றிருக்க வேண்டும். அதன்படி 234 உறுப்பினர்களில் 24 உறுப்பினர்கள் இருப்பது அவசியம்.
 
இந்த இரண்டு விதிகளுக்கும் பொருந்தும் கட்சி தான் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும்.   இந்த இரண்டு விதிகளையும் தே.மு.தி.க. பூர்த்தி செய்துள்ளது. அ.தி.மு.க. வுக்கு அடுத்து அதிக இடங்களில் வென்றுள்ளது. 10 சதவீத எண்ணிக்கை (24) யை விட அதிகமாக 29 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எதிர்க்கட்சி தலைவர் என்பவர் காபினெட் அமைச்சருக்கு உரிய அந்தஸ்தை பெறுவார். எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு வீடும், சிவப்பு விளக்கு சுழல் காரும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 1991-ம் ஆண்டு தேர்தலிலும் இதே போன்று எதிர்க்கட்சியில் இருக்கும் வாய்ப்பை தி.மு.க. இழந்திருந்தது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "29 இடங்களில் வெற்றி: விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்"

Post a Comment