தலைப்புச் செய்தி

Wednesday, May 11, 2011

பிரதி 13-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை: மத்திய தேர்தல் பார்வையாளர்கள் வருகை


தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தமிழக சட்டசபையுடன் சேர்த்து புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடந்ததால் 5 மாநிலங்களிலும் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை மே 13-ந் தேதி நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
 
இதனால் தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்பும் ஓட்டு எண்ணிக்கைக்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 234 தொகுதிகளுக்கான ஓட்டுகள் 91 இடங்களில் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கையையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 91 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 3500 பேர் துணை ராணுவ படை வீரர்கள். மேலும் 18 கம்பெனி துணை ராணுவ படையினர் மேற்கு வங்காளத்தில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்கள்.
 
ஒவ்வொரு மையங்களிலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அவ்வப்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க புதிதாக 55 பார்வையாளர்கள் கொண்ட மத்திய குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் இன்று சென்னை வந்து பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு டெல்லியில் இருந்தபடியே தலைமை தேர்தல் கமிஷனர் ஒய். குரேஷி வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறார்.
 
ஓட்டு எண்ணும் போது அவற்றை வீடியோ மூலம் தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். இதற்காக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு டேபிளிலும் வீடியோ காமிரா, வெப் காமிரா பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு டேபிளிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் மற்றும் 3 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்தெந்த தொகுதியில் பணிகள் என்பது நாளை காலை குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும்.  
 
வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு மேஜைக்கு ஒரு ஏஜெண்டை வேட்பாளர்கள் நியமித்துக்கொள்ளலாம். ஏஜெண்டுகளாக நியமிக்கப்படுபவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி தலைவர் பதவியில் இருப்பவர்களாக இருக்கக் கூடாது. துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களை ஏஜெண்டுகளாக நியமித்துக் கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஏஜெண்டுகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று மாலை வரை பெறப்பட்டது.
 
சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் ஓட்டுக்கள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், குயின் மேரீஸ் கல்லூரி ஆகிய 3 இடங்களில் எண்ணப்படு கின்றன. லயோலா கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பிரதான கட்டிடத்திலும், ஜூப்ளி கட்டிடத்திலும் இன்று காலை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
 
மத்திய சென்னை இணை கமிஷனர் சாரங்கன் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளித்தார். இதில் துணை கமிஷனர்கள் வர்சினி, பன்னீர்செல்வம், மயில்வாகனன், மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ் பெக்டர்கள் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். இன்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்திலும், குயின் மேரீஸ் கல்லூரியிலும் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பிரதி 13-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை: மத்திய தேர்தல் பார்வையாளர்கள் வருகை"

Post a Comment