தலைப்புச் செய்தி

Tuesday, March 15, 2011

ஜப்பான் அணு உலையில் ஹைட்ரஜன் வெடிப்பு: கதிர்வீச்சு அபாயம் தொடர்ந்து நீடிப்பு

டோக்கியோ, மார்ச் 14: சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள ஹைட்ரஜன் உலை ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. இதனால் இந்த ஆலையிலிருந்து கதிரியக்க அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது.


இந்த அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளின் சுற்றுச் சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணுக் கதிர்வீச்சு மிகக் குறைவாக உள்ளதாக இந்த அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் தெரிவித்த போதிலும் இங்கிருந்து வெளியாகும் அணுக் கதிர்வீச்சு ஒரு மாதத்துக்கு நீடிக்கும் என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கதிர்வீச்சால் பெரும் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த 1-வது மற்றும் 3-வது அணு உலையிலிருந்து கதிர் வீச்சு வெளியாவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மூலப் பகுதியிலிருந்து வெப்பம் வெளியாவதைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜப்பான் நாடாளுமன்ற முதன்மை செயலர் யுகியோ எடானோ தெரிவித்தார்.

ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுப்புற சுவர்களில் சேதம் ஏற்பட்டது. இந்த வெடிப்பு சத்தம் 40 கி.மீ. தூரத்தில் இருந்தவர்களுக்குக் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 3 ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் 7 பேரைக் காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அணு உலையைக் குளிர்விக்க தொடர்ந்து கடல் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால் அணுக் கதிர்வீச்சு வெளியாகும் அளவு அதிகரிக்கவில்லை. திங்கள்கிழமை அணு உலையைச் சுற்றிய பகுதிகளில் கதிரியக்க அளவு 500 சீவர்ட்டாக இருந்தது. இது ஏற்றுக்கொள்ளும் அளவாகும். ஞாயிற்றுக்கிழமை மிக அதிகபட்சமாக இப்பகுதியில் அணுக் கதிர் வீச்சு அளவு 1,557.5 சீவர்ட்டாக இருந்தது.

இதனிடையே ஒனக்வா பகுதியில் உள்ள மற்றொரு அணு மின் நிலையத்தில் வெடிப்பு நிகழலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்தினரும், மீட்புக் குழுவினரும் இந்த ஆலையிலிருந்து 20 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள 1.80 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். ஏற்கெனவே 3.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

கதிர் வீச்சு குறித்து ஆலையைச் சுற்றி நான்கு இடங்களில் ஆய்வு செய்ததில் அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

இந்த அணுமின் நிலையத்தில் உள்ள 4 உலைகளும் கடந்த வெள்ளிக்கிழமையே நிறுத்தப்பட்டன. இருப்பினும் சுனாமி பாதிப்பால் 1-வது மற்றும் 3-வது உலையில் வெடிப்பு நிகழ்ந்து கதிர் வீச்சு காற்றில் பரவியது.

அணு உலையின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீர் பயன்படுத்தப்படுகிறது. வெப்பத்தைத் தணிக்க மாற்று வழியை இந்நிறுவனம் கடைப்பிடிக்கிறது. அணு உலை 2 மற்றும் 4-ல் வெப்பத்தை தணிவிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிப்பு நிகழ்ந்த 3-வது உலை பாதுகாப்பாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிபுணர்கள் கருத்து: இரண்டாம் உலகப் போரின்போது அணு குண்டு தாக்குதலுக்குள்ளான ஜப்பான் மீண்டும் அணுக் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இங்குள்ள ஃபுகுஷிமா தீவில் உள்ள அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காற்றில் பரவி வரும் கதிர்வீச்சு ஒரு மாதம் வரை நீடிக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆலைக்கு வெளியே கதிர் வீச்சு தொடர்ந்து அளக்கப்பட்டு வருவதாக ஜப்பான் நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த அணு உலையிலிருந்து 60 மைல் தூரத்தில் பறந்த அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கதிர்வீச்சை உணர்ந்ததாக "நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அணுக் கதிர்வீச்சில் சீசியம் 137, ஐயோடின்-121 ஆகியன கலந்திருப்பதாகவும் இது சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலான விஷயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அணு உலை உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் அணு மூலப் பொருளிலிருந்து வெளியாகும் வெப்பம் 5 சதவீதம் வரை இருந்து கொண்டேதான் இருக்கும். இதிலிருந்து காமா கதிர் வெளியேறிக் கொண்டே இருக்கும்.

பொதுவாக ஒரு அணு உலையின் செயல்பாட்டை நிறுத்தியவுடன் மின்சார ஜெனரேட்டர் மூலம் அணு உலைக்கு குளிர்ந்த நீர் பாய்ச்சப்படும். அணு உலை வெப்பமடைவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்டதால் அணு உலை முழுவதும் மின்னுற்பத்தி துண்டிக்கப்பட்டது. இதனால் குளிர்விப்பான் செயல்படாத சூழல் உருவானது. இதனால் வெப்பம் அதிகரித்து அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அணு உலைகளுக்கு தேவையான மூலப்பொருளை தொடர்ந்து சப்ளை செய்து கொண்டிருந்தால் அது தொடர்ந்து வெப்பத்தை வெளியிடும். மாறாக குளிர்விக்கும் முயற்சியில் தவறு நிகழ்ந்தால் அது பேராபத்தை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2,000 சடலங்கள் மீட்பு

ஜப்பானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையின் (சுனாமி) ஊழித் தாண்டவத்தில் உயிரிழந்தவர்களில் 2,000 சடலங்கள் மீட்கப்பட்டன.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள மியாகி மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியிலிருந்து பெருமளவிலான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மியாகி கடலோரப்பகுதியில் 1,000 சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன. இதேபோல சென்டாய் பகுதியில் 1,000 சடலங்கள் மீட்கப்பட்டதாக கியோடோ செய்தி தெரிவிக்கிறது.

மினாமிசன்ரிகு பகுதியில் 10 ஆயிரம் பேரைக் காணவில்லை என கியோடோ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் மற்றும் வீடிழந்தவர்கள் சுமார் 4.5 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனிடையே பூகம்பம் தாக்கிய பகுதிகளுக்குச் சென்ற 2,500 சுற்றுலாப் பயணிகளின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற தகவல் தெரியவில்லை என ஜப்பான் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுவினர் 15 ஆயிரம் பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக பிரதமர் நவ்டோ கான் தெரிவித்தார். இதேபோல தற்காப்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிய 32 பேரை இஷினோமாகி துறைமுக பகுதியிலிருந்து மீட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, தொலைத் தொடர்பு வசதிகளும் செயலிழந்துள்ளன. 5.61 லட்சம் தொலைபேசி இணைப்புகளும், 2.21 லட்சம் இண்டர்நெட் இணைப்புகளும் செயலிழந்துள்ளதாக நிப்பான் டெலிகார்ப் மற்றும் டெலிபோன் ஈஸ்ட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ராட்சத கடல் அலை: திங்களன்று மீண்டும் ஜப்பான் கடல் பகுதியில் ராட்சத கடல் அலைகள் எழும்பின. இருப்பினும் அவை சுனாமி அல்ல என்று நிலவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவேட், அமோரி பகுதிகளில் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மீண்டும் நில நடுக்கம்: திங்களன்று ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது. இதனால் சுனாமி ஏற்படாது என கூறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாகத் தெரியவில்லை. கடலோர பகுதியான இபாரகி மாநிலத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 18 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜப்பான் அணு உலையில் ஹைட்ரஜன் வெடிப்பு: கதிர்வீச்சு அபாயம் தொடர்ந்து நீடிப்பு"

Post a Comment