தலைப்புச் செய்தி

Saturday, March 12, 2011

முஷாரப்பை கைது செய்ய பிரிட்டனிடம் உதவி கோரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், மார்ச் 10: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்வதற்கு பிரிட்டனின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

பேநசீர் புட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் அப்போது அதிபராக இருந்த முஷாரப்பின் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பதவியில் இருந்து விலகிய அவர், லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தற்போது துபையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், பேநசீர் படுகொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் முஷாரபுக்கு எதிராக 3 முறை கைது உத்தரவு பிறப்பித்தது. எனினும் முஷாரப் வெளிநாட்டில் இருப்பதால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

பேநசீர் படுகொலை தொடர்பான விசாரணையில் முஷாரப் ஒத்துழைக்க மறுப்பதாக மத்திய புலனாய்வுத்துறை தொடர்ந்து கூறிவந்தது.

இந்நிலையில், வரும் 19-ம் தேதிக்குள் அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, முஷாரப்பை கைது செய்வதில் பிரிட்டனின் உதவியை நாடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதற்காக நீதிமன்றத்தின் கைது உத்தரவு பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த உத்தரவு கிடைத்துவிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரி பிரிட்டனின் உள்துறைக்கு அதை அனுப்பி வைத்திருப்பதாகவும் பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சுல் ஹசன் தெரிவித்தார்.

எனினும், பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்து பேநசீர் கொலை வழக்கு விசாரணையில் பங்கேற்கும் திட்டம் ஏதும் இல்லை என முஷாரப் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஷாரப்பை கைது செய்ய பிரிட்டனிடம் உதவி கோரும் பாகிஸ்தான்"

Post a Comment