தலைப்புச் செய்தி

Monday, March 14, 2011

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

டோக்கியோ, மார்ச் 13: ஜப்பானின் கிழக்குக் கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.

கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டு அதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதன் சோகம் அடங்காத சூழலில் மீண்டும் அங்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவுக்கு அருகே நில நடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் லேசாக ஆடின. ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 10.26 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், இது டோக்கியோவுக்கு 176 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 150 முறை லேசான பின்னதிர்வுகள் ஏற்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

8 அடி நகர்ந்தது: சுனாமியின் தாக்கத்தால் ஜப்பானில் உள்ள ஒரு தீவு 8 அடி தூரம் நகர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்கத்துக்குப் பிறகு இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று அமெரிக்காவின் நிலவியல் நிபுணர் பால் ஏர்ல் தெரிவித்தார்.

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோரம் சேறும் சகதியுமாக சுனாமி பேரலை இழுத்துச் சென்ற பொருள்கள் சிதறிக் கிடக்கின்றன. இங்குள்ள மினாமிஸன்ரிகு கிராமத்தில் வசித்த 17,500 மக்களில் பாதிப் பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் இப்பகுதியில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தப்பியுள்ளது. இங்குள்ள கமாய்ஷி நகரில் சுனாமி எச்சரிக்கை உடனடியாக விடுக்கப்பட்டதால் மக்கள் உயரமான கட்டடங்களுக்குச் சென்று தப்பினர். இவ்விதம் தப்பியவர்களின் கண் முன்னே அவர்களது வீடுகள்,கார்களை சுருட்டி இழுத்துச் சென்றது சுனாமி பேரலை.

சென்டாய் நகர்தான் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுனாமி எச்சரிக்கை ஒலி அடங்கும் முன்பாகவே பேரலை தாக்கிவிட்டது. இந்நகரின் கடலோரப் பகுதிகள் முழுவதும் சுனாமி சுருட்டிய கன்டெய்னர்கள், கார்கள் உள்ளிட்ட பல பொருள்களும் சிதிலமடைந்து குவிந்து கிடக்கின்றன. விளை நிலங்களையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. இப்போது விளை நிலங்களில் குப்பைகளும், கழிவுகளும் குவிந்து கிடப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்"

Post a Comment