சென்னை, மார்ச் 12: யாருக்கு எந்தத் தொகுதி என்பதை முடிவு செய்வதில் திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் சனிக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வரவில்லை.
சில குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதமாக இருப்பதால் திமுக கூட்டணி நடவடிக்கைகளில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல் அதிமுக கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இரு அணிகளிலும் சமரசம் ஏற்படாததால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து இரு கட்சிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தொகுதி ஒதுக்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கான 63 தொகுதிகள் எவை என்று அடையாளம் காண்பது தொடர்பாக வியாழக்கிழமையில் இருந்து பேச்சு நடந்து வருகிறது. மூன்று நாள்கள் முடிந்தவிட்ட நிலையிலும் இதுவரை உடன்பாடு காணப்படவில்லை.
இளைஞர் காங்கிரஸýக்காக வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை கொண்ட பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தொகுதிகளில் 15 தொகுதிகளையாவது கேட்டுப் பெறவேண்டும் என்பது காங்கிரஸ் மேலிடத்து உத்தரவு என்று கூறப்படுகிறது.
இதில் பல தொகுதிகள் இப்போது திமுக மற்றும் பாமக வசம் உள்ள தொகுதிகள் என்று தெரிகிறது.
தொகுதி மறுவரையறையால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 48 தொகுதிகளில் 5 தொகுதிகளை இழந்துவிட்டது. இதனால் அந்தத் தொகுதிகளின் அருகில் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் அந்தத் தொகுதிகள் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள அல்லது இப்போது திமுக வசம் உள்ள தொகுதிகளாகும். இதுதான் முட்டுக்கட்டை நீடிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
குறிப்பாக அமைச்சர் நேருவின் தொகுதியான திருச்சி, அமைச்சர் பெரிய கருப்பன் தொகுதியான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், அமைச்சர் பரிதி இளம்வழுதி தொகுதியான எழும்பூர், அமைச்சர் கே.பி.பி. சாமி தொகுதியான திருவொற்றியூர், வேளச்சேரி, திட்டக்குடி, திருத்தணி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸ் மிகவும் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் அண்ணா அறிவாலயத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐவர் குழுவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு அறிவாலயம் செல்லாமல் கலைந்து சென்றுவிட்டனர்.
காங்கிரஸ் ஐவர் குழுவினர் அறிவாலயம் வராதது திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை மாலை அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. 99.9 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது என்று கூறினார். எந்தெந்த தொகுதிகள் உங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேட்டபோது, அதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
உயர்நிலைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் முடிவான பிறகு முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதிமுக அணியில்: அதிமுக தரப்பில் இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மார்க்சிஸ்ட் 18 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளும், ம.தி.மு.க. 21-க்கு குறையாத தொகுதிகளும் எதிர்பார்ப்பதாக அந்தந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அணியில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதி 182 தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக 144 தொகுதிகளை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீதி 38 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் இந்த மூன்று கட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் வரும் 19-ம் தேதி வரை பொறுத்திருப்பதாகவும் அதுவரை அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் போக்கால் மதிமுக மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
0 comments: on "தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்: திமுக- காங்கிரஸ் பேச்சில் முட்டுக்கட்டை நீடிப்பு"
Post a Comment