தலைப்புச் செய்தி

Saturday, March 12, 2011

அதிமுக அணியில் ரங்கசாமி கட்சி: ஜெயலலிதாவை இன்று சந்திக்கிறார்

புதுச்சேரி, மார்ச் 11: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுனைப்போட்டி நிச்சயமாகிவிட்டது.

அதிமுக கூட்டணியில் இணைந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் சனிக்கிழமை ரங்கசாமி சந்திக்கிறார்.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திப்பது என்று ரங்கசாமி கட்சி முடிவு செய்துள்ளதால், இந்த அணிக்குத் தலைமை வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அதிமுக ஏற்றுக் கொள்ளும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் அதிமுக 17 தொகுதிகளிலும், முன்னாள் அமைச்சர் கண்ணன் தலைமையிலான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் 9 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஓரிடத்திலும், ஜனதாதளம் (எஸ்) ஓரிடத்திலும் போட்டியிட்டன.

இப்போது நடைபெறும் தேர்தலில் இந்த அணியின் சார்பில் ரங்கசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதிமுகவுக்கு இணையான அளவில் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று

அவரது கட்சி கேட்கக்கூடும்.

இப்போது அமையும் அதிமுக அணியில் அதிமுக- இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் ரங்கசாமியின் புதிய கட்சி இக் கூட்டணியில் சேருகிறது. இதனால் இந்தக் கூட்டணி காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு நிகராக வலுப்பெறும். அதனால் இத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் அணிக்கு தலைமை யார்?

முதலில் பிரச்னையில் தத்தளித்த திமுக-காங்கிரஸ் கூட்டணி இப்போது ஓரளவுக்குத் தமிழகத்தில் தெளிவு நிலைக்கு வந்துவிட்டது. எந்தத் தொகுதி யாருக்கு என்பது குறித்தும் இக்கூட்டணி விரைவில் முடிவெடுக்க இருக்கிறது. புதுச்சேரிக்கான பேச்சுவார்த்தை நடத்த திமுக-காங்கிரஸில் இப்போது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனால் இந்த அணியில் தமிழகத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளே புதுச்சேரியிலும் அணி சேருகின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதால் அங்கு உருவாகியுள்ள அணிக்கு திமுக தலைமை வகிக்கிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதனால் இங்கு அமையும் அணிக்கு காங்கிரúஸ தலைமை வகிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் இருக்கின்றன. இதில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 11 தொகுதிகளிலும், பாமக 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

இப்போது அமையும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை. அதற்குப் பதிலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. அதனால் கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட அதே அளவு என்ற எண்ணிக்கையில் ஒரு தொகுதி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

மீதியுள்ள தொகுதிகளைக் கடந்த தேர்தலில் பகிர்ந்து கொண்ட அளவில் காங்கிரஸ்-திமுக- பாமக பிரித்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அதிமுக அணியில் ரங்கசாமி கட்சி: ஜெயலலிதாவை இன்று சந்திக்கிறார்"

Post a Comment