தலைப்புச் செய்தி

Wednesday, March 16, 2011

ஜப்பானில் மேலும் 2 அணு உலைகளில் வெடிப்பு

டோக்கியோ, மார்ச் 15: ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் 2, 4 ஆகிய இரு உலைகளில் செவ்வாயன்று வெடிப்பு ஏற்பட்டது. 4-வது உலையில் தீ பிடித்தது. இவை அணுமின் நிலையத்தின் நிலைமையை மிகவும் மோசமடையச் செய்துள்ளன. வெடிப்பினைத் தொடர்ந்து, கதிரியக்கம் தாங்கிய பொருள்கள் காற்றில் பரவியுள்ளன. இது மக்களை பாதிக்கும் அளவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சனிக்கிழமை முதல் ஏற்பட்டு வரும் வெடிப்புகளினால் அணு மின் நிலையத்தில் பெரும் அணு விபத்து உண்டாக்கும் ஆபத்தான நிலை எட்டியுள்ளது. ஏற்கெனவே கதிர்வீச்சு தொடங்கிவிட்டது.

இது குறித்துப் பேசுகையில், ""கதிர்வீச்சு மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அளவை எட்டியுள்ளது'' என ஜப்பான் பிரதமர் நவாடோ கான் கூறினார்.

இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு அவர் ஜப்பான் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ""பாதிக்கப்பட்ட அணு நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியத் தொடங்கிவிட்டது. இது காற்று மண்டலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் கசிவு ஏற்படும் பெரும் அபாயம் உள்ளது,'' என அவர் தெரிவித்தார்.

அணுமின் நிலையத்தின் 30 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை பதற்றம் இன்றி அமைதியாக இருக்கும்படி கூறினார். யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இயன்றவரை மின்சாரத்தை சேமிக்குமாறு நவாடோ கான் கேட்டுக் கொண்டார். இப்பிரதேசத்தில் 1,40,000 பேர் வசித்து வருகின்றனர். ஃபுகுஷிமாவின் 3-வது உலையில் உள்ள கதிர்வீச்சின் அளவு சாதாரணமாக ஓராண்டில் மனிதர்களுக்கு ஏற்புள்ள அளவைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாக உள்ளது என அணு சக்தி நிபுணர்கள் கூறியதாக ஜப்பானின் செய்தி நிறுவனம் கியோடோ தெரிவிக்கிறது.

சனிக்கிழமை 1-ம் உலையில் குளிர்விப்பான்கள் பழுதடைந்ததால் முதல் முறையாக வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஹைட்ரஜன் வெளியேறியது. வெடிப்பைத் தொடர்ந்து, அணு நிலையத்தைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை சம்பவங்கள் குறித்து, அந்நாட்டின் தலைமை தகவல் அதிகாரி பேசும் போது, 4-வது உலையில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

செவ்வாயன்று 2, 4 ஆகிய உலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளினால் உண்டான மிக அதிக அளவிலான கதிர்வீச்சு மனித உடல்களுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கும் என அமைச்சரவை தலைமைச் செயலர் யூகியோ எடானோ கூறினார்.

உலைகள் அனைத்தும் இப்போது செயல்பாட்டில் இல்லை. 1,2,3 ஆகிய உலைகளில் மூலப் பொருளின் ஒரு பகுதி உருகியிருக்கக் கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தின் எல்லா மூலப்பொருளும் முற்றிலும் உருகிவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதாக, டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2-வது உலையில் மூலப்பொருள் வைத்துள்ள கான்கிரீட் அமைப்பு இப்போது சீல் வைத்த நிலையில் இல்லை. அடுத்த இரு நாள்களில் இந்தப் பகுதியில் உள்ள காற்றின் போக்கு கதிர்வீச்சு பரவும் விதத்தை தீர்மானிக்கும். இப்போது, இந்த கதிரியக்கம் தாங்கிய பொருள்கள் கடல் பக்கமாகவே காற்றில் பரவி வருகின்றன. ஃபுகுஷிமா பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.


டோக்கியோ வரை கதிர்வீச்சு

செறிவு குறைந்த கதிர்வீச்சு காற்றில் பரவி, தலைநகரான டோக்கியோவை பத்து மணி நேரத்தில் வந்தடையும் என அங்குள்ள பிரெஞ்சு நாட்டுத் தூதரகம் கூறியுள்ளது.

டோக்கியோ நகரம் ஃபுகுஷிமாவிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கடைகளில் நீண்ட வரிசை

மக்களை பதற்றமின்றி அமைதியாக இருக்கும்படி பிரதமர் கூறினாலும், டோக்கியோவிலும், மற்ற நகரங்களிலும் மக்கள் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

டின் பெட்டிகளில் விற்பனையாகும் உணவு வகைகள், பேட்டரி, ரொட்டி, தண்ணீர், பழங்கள் ஆகியவை வேகமாக விற்று வருகின்றன. பெட்ரோல் பம்புகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கார்களில் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். ஒன்றிரண்டு புல்லட் அதிவேக ரயில் இயக்கப்படுவதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அதே போல நகரப் பேருந்துகள் சில மட்டுமே இயக்கப்படுகின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜப்பானில் மேலும் 2 அணு உலைகளில் வெடிப்பு"

Post a Comment