தலைப்புச் செய்தி

Thursday, January 20, 2011

மகத்துவ காய்கறிகள்

வெண்டைக்காய்: குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். மேலும், வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவு ஆண்களுக்கு விந்துவை கெட்டிப் படுத்தி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும்.


நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக்காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

கத்தரிக்காய்:

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான்.
பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு வந்தால் நல்ல பயன் பெறலாம்.
அவரைக்காய்:

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.

புடலங்காய்:

நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரக்காய்:

இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

சுரைக்காய்:

இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இந்த விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மை இழந்தவர்கள்கூட ஆண்மை பெறுவார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மகத்துவ காய்கறிகள்"

Post a Comment