தலைப்புச் செய்தி

Sunday, November 28, 2010

நீரா ராடியா ஒப்புதல்: ரூ.60 கோடி வாங்கினேன்

""2 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக, ஆ. ராசாவுடன் பேசியிருக்கிறேன், இந்த விவகாரத்தில் என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்ற 60 கோடி ரூபாயை ஆலோசனைத் தொகையாகப் பெற்றிருக்கிறேன்'' என்று நீரா ராடியா வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தும் நீரா ராடியா தில்லியில் பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். அதற்காக அவர்களிடம் ஆலோசனைக் கட்டணம் பெறுகிறார். அவருடைய வாடிக்கையாளரான டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் கிட்டுவதற்காக தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுடன் பேசியிருப்பதையும், தான் கூறிய ஆலோசனைகளுக்காக ரூ.60 கோடியைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இ.டி. விசாரணை: மத்திய நிதித்துறையின் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் அமல்பிரிவு இயக்கக (இ.டி.) அதிகாரிகள் அவரை புதுதில்லியில் புதன்கிழமை காலை 9 மணி முதல் நீண்டநேரம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

20 பக்க வாக்குமூலம், 500 ஆவணங்கள்: [/B]அவற்றை அவர் தனது கைப்பட 20 பக்கங்களில் எழுதி அளித்திருக்கிறார். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் கேள்விகள் கேட்க நேர்ந்தால் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். அத்துடன் வங்கிக் கணக்கு, வரைவோலை நகல் உள்ளிட்ட 500 ஆவணங்களையும் அவர் ஒப்படைத்திருக்கிறார். விசாரணைக்குத் தேவை என்றால் வேறு ஆவணங்களையும் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் பாஸ்போர்ட்: ]நீரா ராடியாவிடம் பிரிட்டிஷ் நாட்டு பாஸ்போர்ட் இருக்கிறது.

நீரா ராடியாவுக்கு மத்தியில் உள்ள மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் நல்ல பரிச்சயம் இருக்கிறது. பிரபல நிறுவனங்களுக்குத் தொழில் வளர்ச்சிக்காக அவர் ஆலோசகராகச் செயல்படுகிறார். அத்துடன் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு ஏதேனும் இடையூறு இருந்தால் அவற்றைக் களையவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ அதிகாரிகளையோ சந்தித்து ஆவன செய்கிறார். இந்தச் சேவைக்காக அவருக்கு கோடிக்கணக்கில் கட்டணம் தரப்படுகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு: அவருடைய உயர் வட்டார பழக்கங்களையும் வருவாய் பெறக்கூடிய வாய்ப்புகளையும் உற்றுக் கவனித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரைப்பற்றி மேலும் தகவல்களைத் திரட்ட 2009 நவம்பரில் அவருடைய தொலைபேசி உரையாடலை அவருக்குத் தெரியாமலே பதிவு செய்ய ஆரம்பித்தனர். அவருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்குள்ள நெருக்கம் அந்த உரையாடல் பதிவு மூலம் உறுதிப்பட்டிருக்கிறது.

சி.பி.ஐ.க்குக் கடிதம்: இதையடுத்து வருமான வரித்துறை இணை ஆணையர் ஆசிஷ் அப்ரோல், மத்திய புலனாய்வுத்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விநீத் அகர்வாலுக்கு இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி 2009 நவம்பர் 20-ல் கடிதம் எழுதியிருக்கிறார். இதையடுத்தே நீரா ராடியாவிடம் விசாரிக்கலாம் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது.

டாடா டெலிசர்வீசஸ், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய தனது வாடிக்கையாளர்களுக்காக ஆ. ராசாவைச் சந்தித்திருக்கிறார் நீரா ராடியா.
ராடியாவுக்கு பணம் தந்தது யார்? அவருடைய வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், விட்காம், நியூகாம் கன்சல்டிங், மேஜிக் ஏர்லைன்ஸ், நோசிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு யார் யார் எதற்காகப் பணம் கொடுத்தார்கள் என்பதையும் வருவாய்ப் புலனாய்வுத்துறையின் அமல்பிரிவு இயக்குநரக அதிகாரிகள் கேள்விகேட்டு துளைத்துள்ளனர். இதை அத்துறையின் தில்லி பிராந்திய துணை இயக்குநர் பிரபா காந்த் உறுதி செய்திருக்கிறார்.

""ராடியாவிடம் விசாரணை நடத்தினோம், தேவைப்பட்ட ஆவணங்களைப் பெற்றோம். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும், மேற்கொண்டு நாங்கள் கேட்கும் ஆவணங்களைத் தர வேண்டும் என்று கூறியிருக்கிறோம்'' என்றார் பிரபா காந்த்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம்:சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டப்படியும் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டப்படியும் நோட்டீஸ் தரப்பட்டு ராடியாவிடம் விசாரணை நடந்திருக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் 50-வது பிரிவின்கீழ் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. அவர் மீது வழக்கு தொடரும்பட்சத்தில் இதை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பதிவு செய்ய முடியும்.

ராடியா பேட்டி:ராடியாவிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள், நான் அதற்குப் பதில் அளித்திருக்கிறேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியிருக்கிறேன், ஆவணங்களைக் கேட்டாலும் தருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன் என்றார்.

செல்வாக்கானவர்:2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ராடியாவுக்கும் பங்கு இருப்பதாக முதல் நோக்கில் தெரிகிறது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுவதுடன் அரசின் கொள்கைகள், விதிமுறைகளையே மாற்றச் செய்யும் அளவுக்கு அவர் செல்வாக்கு படைத்தவர் என்று தெரிகிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நீரா ராடியா ஒப்புதல்: ரூ.60 கோடி வாங்கினேன்"

Post a Comment