வாஷிங்டன் : ஈராக்கில் அமெரிக்க படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால், ஆப்கன் - பாக்., எல்லையில் தற்போது மேற்கொள்ளப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இனி அதிக அக்கறை காட்டப்படும் என்றார்.
உயிர்கொல்லி ஆயுதங்களை ஈராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேன் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக் மீது தாக்குதலை நடத்தின. ஆட்சியை இழந்து தலைமறைவாக இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, 2006ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அமெரிக்க அதிபராக இருந்த புஷ் காலத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளை, அப்போதைய செனட்டராக இருந்த ஒபாமா எதிர்த்தார். தான் ஆட்சிக்கு வந்தால் ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன்' என கூறியிருந்தார். இதன்படி ஒபாமா அதிபராக பொறுப்பேற்றதும், ஈராக்கிலிருந்து படிப்படியாக ஒரு லட்சம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. அதிபர் ஒபாமா முன்னர் கூறியபடி, ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் கூறியதாவது: சதாம் உசேன் ஆட்சி முடிவுக்கு வந்த பின், அந்நாட்டின் பாதுகாப்புக்காகவும், அரசு மற்றும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்காகவும் கடந்த ஏழாண்டுகளாக அமெரிக்க படைகள் பணியில் ஈடுபட்டிருந்தன. இனி ஈராக்கின் பாதுகாப்பு, அந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஈராக்கில் தற்போது தங்கியுள்ள அமெரிக்க படைகள், அந்நாட்டு வீரர்களுக்கு பயங்கரவாதத்தை தடுக்கும் பணிக்கு உதவும். ஈராக்கை பாதுகாக்க அமெரிக்கா கொடுத்த விலை அதிகம். ஈராக்கில் நடந்த சண்டையில், அமெரிக்க வீரர்கள் 4 ஆயிரத்து 400 பேர் பலியாகியுள்ளனர்; ஏராளமான பொருட்கள் செலவாகியுள்ளன. தற்போது ஈராக்கில் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது ஈராக்கின் நிர்பந்தத்தால் அல்ல. நாங்களாகவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். இனி, பொருளாதார மேம்பாட்டில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் வேலையிழந்துள்ளனர்.
நடுத்தர வர்க்க மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள அல்-குவைதாவினரை ஒழிக்கும் பணியில் இனி முழுவீச்சில் ஈடுபடுவோம். அவர்களால் அமெரிக்காவுக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாதிகளின் கூடாரமாக மீண்டும் ஆப்கன் மாறி விடாதபடி எங்களது நடவடிக்கை தொடரும். ஈராக் அளவுக்கு ஆப்கன் நிலைமை முன்னேறவில்லை. எனவே, அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு இன்னும் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்க படைகளை ஆப்கனிலிருந்து வாபஸ் பெற முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
Source :தினமலர்
0 comments: on "ஈராக்கில் அமெரிக்க தாக்குதல் முடிந்தது: இனி ஆப்கன் தான்"
Post a Comment