சென்னை: தமிழகத்தில் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அரசும் காவல்துறையும் ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போக்குவரத்து சீராக நடைபெற வேண்டிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 11) திருப்பதி குடை உற்சவமும் துவங்கியது. முதல்நாள் ரம்ஜான் வந்தது. இத்தகைய காரணங்களால் செப்டம்பர் 10 அன்று சாலைகளில் மக்கள் பெருக்கம் பல்லாயிரமாகக் கூடியது.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எத்தகைய நடவடிக்கையையும் காவல் துறை செய்யவில்லை. ஊர்க்காவல்படை போன்றவற்றை பணியில் அமர்த்தியதாகவும் தெரியவில்லை. பல இடங்களில் பல மணி நேரம் மக்கள் செல்ல முடியாமல் திண்டாடினார்கள். இதற்கு காரணம் முன்னேற்பாடு செய்யாததே.
தமிழகத்தில் தொடர்ந்து ரயில் தண்டவாளங்களில் நாசவேலைகள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? பெரிய விபரீதம் நடக்கும் முன் தனது செயல்பாட்டை மறுபரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை மூலம் நாசகார செயல்களை செய்வோரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
திருப்பதியில் பலூனில் கேமரா வைத்து முக்கிய இடங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்படி நவீன முறையில் தக்க நடவடிக்கைகளை தமிழக காவல்துறை செயல்படுத்திட இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட ஊர்களிலும், சென்னையில் வருகின்ற 19ம் தேதியன்றும் விநாயகர் விசர்ஜன விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த விழாவிற்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளையும், போக்குவரத்து சீராக நடைபெறவும் வேண்டிய ஏற்பாடுகளையும் தமிழக அரசும், காவல்துறையும் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்
0 comments: on "தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?-இந்து முன்னணி"
Post a Comment