தலைப்புச் செய்தி

Sunday, September 19, 2010

பீப்ளி லைவ் - இந்தியாவின் முகம்

 

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நாட்டின் சமூக, பொருளாதரத்தை பாதித்த அல்லது கட்டமைத்த காரணிகளுள் முக்கியமானவை பசுமைப்புரட்சியும், உலகமயமாக்கலும். இவ்விரு நிகழ்வுகளையும் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு விவாதங்கள் இன்றுவரை நடைபெற்று வருவது ஒருபுறமிருக்க, தனி மனிதர்களது வாழ்க்கைச்சூழலில் இவ்விரு நிகழ்வுகளும் நிகழ்த்திய மாற்றங்கள் தனிமனித வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாக இல்லையென்பது பெரும்பான்மையான சமூக ஆய்வுகளின் முடிவாக உள்ளது. இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்கத்துவங்கி இரு தலைமுறைகள் கடந்தபின்னரும் பஞ்சம் மற்றும் பசியினால் தற்கொலைகள் அதிகரிப்பது, அரசின் கிடங்குகளில் பல்லாயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் கையிருப்பாக வைக்கப்பட்டு வீணடிக்கப்படுவதும், அதே உணவு தானியங்களின் விலை சந்தையில் பன் மடங்கு லாபத்துடன் விற்பனை செய்யப்படுவது என எதிர்மறையான சமூகச் சூழலே நிலவுகிறது. ஜனநாயக ரீதியில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் எதிர்மறையான நிகழ்வுகளை மட்டுப்படுத்தி சமநிலையாக சமூகமும், அரசும் இயங்க முக்கிய பங்காற்றுவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும்.

உலகமயமாக்கல் நிகழ்த்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்க அல்லது அபாயகரமான மாற்றம் என்பதற்கு சரியான உதாரணமாக, ஒரு காலத்தில் சேவை சார் துறையாக இருந்த ஊடகத்துறை இன்று பெரும் லாபமீட்டும் தொழில்துறையாக மாறியதை குறிப்பிடலாம். தொழிலில் நிலைத்திருப்பதும், லாபமீட்டுவதும் கடும் போட்டிகளுக்குள்ளான நிலையில் தங்களின் தனித்தன்மைகளை இழந்திருக்கும் இன்றைய ஊடகத்துறையின் செயல்பாடுகள் தனிமனிதர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்பதாகவே உள்ளது. ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் முக்கியமானதாக கருதப்படும் ஊடகங்களின் இன்றைய போக்கு சமூக மேம்பாட்டை நோக்கியதாக இல்லாத நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு ஊடகமாக மாறிவிட்ட திரைப்படங்களில் அவ்வப்போது சில நல்ல முயற்சிகள் அரிதாக நடைபெறுவதுண்டு. சமீபத்தில் நடிகர் அமீர்கான் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அனுஷா ரிஷ்வி இயக்கத்தில் வெளியான "பீப்ளி-(லைவ்)" என்ற திரைப்படம் நாட்டின் முதுகெலும்பு எனப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைமையை அப்பட்டமாக படம்பிடித்து காட்டுவதோடு அரசியல் மற்றும் ஊடகங்களின் போலித்தனங்களையும் தோலுரித்து காட்டுகிறது.


வறுமை மற்றும் பஞ்சத்தின் கோரப்பிடியிலிருக்கும் விவசாய சகோதரர்களான நத்தா, புதியா இருவருக்கும் அரசாங்கத்தின் மூலமாக புதிதாக ஒரு சிக்கல் நேருகிறது, அது தங்களின் பரம்பரை நிலத்தை அடமானமாக வைத்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் கடனுக்கான பிணைய நிலத்தை ஏலம் விடப்போவதாக வரும் அறிவிப்பு. கடனையும் திருப்பிச் செலுத்தவும் இயலாமல், பரம்பரை நிலத்தை இழக்க விரும்பாத இருவரும் உள்ளூர் செல்வந்தரும், அரசியல்வாதியுமான நபரிடம் உதவிக்கென வருகிறார்கள். நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும் அரசியல்வாதி இருவரையும் ஏளனமாக பேசுவதோடு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறது என்ற தகவலை கூறி அரசாங்கத்தை அணுகுமாறு கூறுகிறார்.தங்கள் நிலத்தை தக்க வைத்துக்கொள்ள வேறு வழி இல்லாத நிலையில் சகோதரர்கள் இருவரும் கலந்துபேசி தங்களுள் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது எனவும், மற்றவர் கிடைக்கும் இழப்பீட்டு தொகையில் நிலத்தையும் மீட்டு குடும்பத்தை காப்பது என முடிவு செய்கின்றனர்.

இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம் செயல்படுவதை வேறு சிலரிடமும் உறுதி செய்த பின்னர் 'நத்தா' தற்கொலை செய்வது கொள்வது என தீர்மானிக்கின்றனர். இத்தகவலை எதேச்சையாக அறிந்துகொள்ளும் உள்ளூர் தினசரியில் நிருபராக பணிபுரியும் 'ராகேஷ்' தனது தொடர்பிலிருக்கும் பிரபலமான செய்தி தொலைகாட்சி நிருபரிடம் அத்தகவலை தெரிவிக்கிறான்."டி.ஆர்.பி" என்னும் மாயக்குதிரையின் மூலம் முன்னணியில் பயணிக்க விரும்பும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் "கிடைத்தற்கரிய" இச்செய்தியை நேரடி ஒளிபரப்பு செய்வதாக களமிறங்க, தேசமெங்கும் ஊடகங்களால் பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது. வழக்கம் போல இறுதியில் விழித்துக்கொள்ளும் அரசு, நடைபெறவிருக்கும் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு 'நத்தா' தற்கொலை செய்துகொள்ளாமல் காக்க ஒருபுறம் நடவடிக்கைகள் எடுக்க, இதே தற்கொலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆளும் கட்சியை தோற்கடிக்க சதி செய்யும் எதிர்க்கட்சி என விரிவடையும் கதைக்களத்தில் அரசியல் கட்சிகளின் தகிடுதத்தங்கள், ஊடகங்களின் குயுக்திகள் மற்றும் நத்தா குடும்பத்தினரின் அறியாமை என கலவையாய் காட்சிகள் அரங்கேற இறுதியில் 'நத்தா' கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்தில் கட்டிடக்கூலியாய் மாறுவதுடன் படம் நிறைவடைகிறது. நத்தாவின் தற்கொலை முடிவு மற்றும் அதன் நீட்சியாக சமூகம் சந்திக்கும் அபத்தங்கள் என ஒருபுறம் நிகழ, அதே கிராமத்தில் மற்றொரு ஏழை விவசாயி, அரசை நம்பி பயனில்லாத நிலையில் தனக்கான கிணறு ஒன்றை தனியாளாக வெட்டத்துவங்கி பாதியிலேயே மரணமடைகிறார். இச்சம்பவத்தை அரசோ, ஊடகங்களோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.



தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் துவங்கிய தாரளமயமாக்கல் எனும் பொருளா
தார மறுசீரமைப்புகள், இன்றைய விவசாயிகள் மீதும், சிறு தொழில் முனைவோர்கள் மீதும் ஏற்கனவே பல்முனைத்தாக்குதலை நடத்தும் சூழ்நிலையில் அவர்களை காக்கும் பொறுப்புடைய அரசு 'உலக பொருளாதார தேக்கம்' என்ற போலியான திரையினால் சமூக அவலங்களை மறைக்கும் பணியையே தொடர்ந்து செய்கிறது. இலவச திட்டங்களின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினரை சோம்பேறிகளாக்குவது, செயல்படுத்த சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்து தேர்தல் நேர நற்பெயரை ஏற்படுத்திக்கொள்வது, கட்சிகள் தங்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இரட்டைவேடமிடுவது என நிகழ்கால அரசியலையும், செய்திகளை முந்தித் தந்து தங்களை முன்னணியில் நிறுத்திக்கொள்ள எத்தகைய அபத்தங்களையும் செய்வது, குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியுடன் தங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக செய்திகள் வெளியிட்டு அதன் மூலம் ஆதாயம் பெறுவது என இன்றைய ஊடகங்களின் தான்தோன்றித்தனமான போக்கையும் எளிமையான நகைச்சுவை கலந்த வசனங்களின் வாயிலாக சாடியுள்ளது "பீப்ளி-லைவ்"

வட இந்திய கிராமம் ஒன்றை களமாகக் கொண்டு நிகழும் கதையானாலும் பெரும்பாலான இந்திய கிராமங்களை பிரதிபலிப்பதாக இருப்பது கதைப்போக்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. படத்தின் வசனங்கள் உயிர் நாடியாக இருந்து படத்தை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. நடிப்பு , இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளும் மிகச்சிறப்பாகவும், எதார்த்தமாகவும் அமைந்துள்ளது படத்தின் முக்கிய பலமாகும். சமகால இந்தியத் திரைப்படங்களில் தனிக்குரலாக எழுந்து சமூக அவலங்களை ஓங்கி ஒலித்துள்ள பீப்ளி-லைவ், பகட்டுகள், சாயப்பூச்சுகள் இல்லாத அசலான இந்திய முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.

Thanks to http://thiruchol.blogspot.com
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பீப்ளி லைவ் - இந்தியாவின் முகம்"

Post a Comment