இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.
0 comments: on "இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா?"
Post a Comment