தலைப்புச் செய்தி

Monday, September 6, 2010

நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் 9 பேர் பலி

நியூசிலாந்தில் தெற்குத்தீவு பகுதியில் உள்ள பாக்ஸ் கிளேசிளர் ஒரு சுற்றுலா தளமாகும். இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களான பனிமலைகள், மற்றும் பனிக்கட்டி ஆறுகளை சிறிய ரக விமானத்தில் பறந்தபடி பார்த்து மகிழ இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இதில் இங்கிலாந்து. அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 4 பயணிகளும், நியூசிலாந்தை சேர்ந்த 4 பயணிகளும் இருந்தனர். அந்த விமானத்தில் விமானியுடன் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர். ஓடுபாதையில் இருந்து விண்ணில் பாய்ந்து சென்ற இந்த விமானம் மேலே சென்ற சற்று நேரத்தில் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் வானத்தில் கடும் புகையுடன் தீப்பந்து போன்று எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 9 பேரும் உடல் கருகி பலியானார்கள். அவர்கள் யார் என பெயர் விவரங்கள் வெளியிடப்பட வில்லை. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விமானம் புறப்பட்டு சென்ற போது வானிலை நன்றாகவே இருந்துள்ளது. பொதுவாக சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க விமானத்தை நடுவானில் குட்டி கரணம் அடிக்க வைத்து விமானிகள் சாகசம் புரிவது வழக்கம்.

இவ்வாறு செய்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இதை அந்த விமான நிறுவனம் மறுத்துள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமான விபத்து அப்பகுதி மக்களை துக்கத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் 9 பேர் பலி"

Post a Comment