பாக்தாத், செப். 13: இராக் சிறைகளில் எவ்வித விசாரணையும் இன்றி சட்டவிரோதமாக சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
இவர்களில் பலர் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டு விட்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, இராக் சிறைச்சாலை கொடுமைகள் குறித்து 59 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாக்தாதில் உள்ள ரகசிய சிறையில் நூற்றுக்கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு கை, கால் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. ரியாத் முகம்மது சேலா என்பவர் சிறையிலேயே உயிரிழந்துள்ளார். இதேபோல் ஏராளமான மரணங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.
இயந்திரம் மூலம் உடம்பில் துளையிடுவது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் இராக் சிறைகளில் நடைபெறுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய மனித உரிமை மீறல்களை இராக் பாதுகாப்பு படையினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச விதிகளுக்கு உள்பட்டு இராக் சிறைச்சாலை நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று அம்னஸ்டி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
0 comments: on "இராக் சிறைகளில் 30,000 பேர் தவிப்பு"
Post a Comment