அயோத்தியில் 1992ஆம் ஆண்டு சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன்பு இராமர் கோயில் இருந்ததென்றும், அது இராமர் பிறந்த இடம் என்றும் தொடரப்பட்ட 60 ஆண்டுக்காலமாக சர்ச்சையாக இருந்துவரும் பிரச்சனை தொடர்பான வழக்கை விசாரித்துவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.யு.கான், டி.வி.சர்மா, சுதிர் அகர்வால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு வரும் 24ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இத்தீர்ப்பை தள்ளிப்போடுமாறும், நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பும் சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள அனுமதிக்குமாறும் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளீர்களா என்று வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரின் சார்பாக வழக்காடிவரும் வழக்கறிஞ்சர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் மறுத்தனர்.
இதனையடுத்து ரமேஷ் சந்திர திரிபாதியின் மனுவை நிராகரித்து நீதிமன்ற அமர்வு, அடிப்படையில்லாமல் மனு செய்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது. எவ்வளவு அபராதம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கலாம் என்று நீதிபதி அகர்வால் பரிந்துரைத்துள்ளார்.
ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 24ஆம் தேதி, வெள்ளிக் கிழமை இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.





0 comments: on "அயோத்தி வழக்கில் திட்டமிட்டபடி செப் 24ல் தீர்ப்பு: நீதிமன்றம் உறுதி"
Post a Comment