இன்று ஆப்கானில் ஐந்து அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோ தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது. தாலிபானுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களுள் 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை (31.08.2010) கிழக்கு ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட தாலிபான் பாணி குண்டுத் தாக்குதலில் 5 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆப்கானின் தென்பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை தெரிவித்துள்ளது.
ஆப்கானில் அமெரிக்கத் தலைமையிலான வெளிநாட்டுப் படையினர் தலிபான்களுக்கெதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இந்த வருடம் மாத்திரம் 485 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் முழுதும் கொல்லப்பட்ட நேட்டோ படையினரின் எண்ணிக்கையோடு (521) ஒப்பிடும்போது, தாலிபான் தாக்குதலில் மரணத்தைத் தழுவும் வெளிநாட்டுப் படையினரின் எண்ணிக்கை இவ்வருடம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்கானின் தென் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு குண்டுத் தாக்குதலில் 8 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் 7 பேர் அமெரிக்கர்களாவர். தாலிபான்களின் எதிர்த் தாக்குதலின்போது உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 50 ஆக அதிகரித்துள்ளது.
2001 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் அமெரிக்கத் தலைமையில் நேட்டோ படையினரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஆப்கானில், தாலிபான்களை எதிர்த்துப் போரிட்டுவரும் வெளிநாட்டுத் துருப்பினரைப் பொறுத்தவரையில் ஜூன்-ஜூலை மாதங்கள் சவால் நிறைந்தவையாகவும் மிகப் பெருமளவான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள காலகட்டமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source :இந்நேரம்
0 comments: on "ஆப்கானில் மரணத்தைத் தழுவும் அமெரிக்கத் துருப்புகள்"
Post a Comment