லண்டன்:லியானர்டோ டாவின்சியின் புகழ் பெற்ற ஓவியமான மோனலிசாவின் மயக்கும் புன்னகையின் காரணத்தை, ஒருவழியாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர்.இத்தாலியின் புகழ் பெற்ற ஓவியர் லியானர்டோ டாவின்சி. அவரது மோனலிசா உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் இன்றும் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. அவற்றில் மோனலிசா ஓவியத்தில் அதன் புன்னகை, உலகை இன்றும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.அதற்கு காரணம், அந்த ஓவியத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் போது அது புன்னகைப்பதாகத் தெரியாது. ஆனால் சற்றே ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.
இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மோனலிசாவின் புன்னகையை டாவின்சி எப்படி தன் கைவண்ணத்தில் கொண்டு வந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. அதற்காகப் பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.சமீபத்தில் அந்த ஓவியத்தின் மீது "எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு அதன் தன்மை ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில் சில உண்மைகள் தெரியவந்துள்ளன. அதன்படி, இத்தாலியில் டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்தன.
அவற்றில் "ரினையசன்ஸ்' என்ற அடிப்படையில், பல்வேறு நுணுக்கமான வண்ணங்களைக் கலந்து ஒரு வித தெளிவற்ற தோற்றத்தின் மூலம், தான் நினைத்ததை ஓவியக் கலைஞர் கொண்டு வருவார். அதற்கு இத்தாலி மொழியில் "புமாட்டோ' என்று பெயர்.இந்த புமாட்டோ முறையைப் பயன்படுத்தித்தான் டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார். மேலும், மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வண்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளார். அதுவும் மயக்கும் புன்னகைக்கு ஒரு காரணம்.
"இப்படி 40 அடுக்குகளாக பளபளக்கும் முறையில் வண்ணங்களைக் குழைத்துப் பூசும் பட்சத்தில், அந்த இடம் பல மாதங்களாகக் காய வைக்கப்பட்டிருக்கும். இதனால் இந்த ஓவியம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கலாம்' என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.மேலும், அந்த புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் "எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.இப்போது இந்த முறையை, டாவின்சி தன் பிற ஓவியங்களிலும் பயன்படுத்தியிருக்கிறாரா என்பது குறித்தும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
0 comments: on "மோனலிசா ஓவியத்தின் புன்னகையின் மர்மம் என்ன?ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்"
Post a Comment