சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக செயல்படுபவர்களை தண்டிக்க இராணுவம் 27 சித்ரவதை கூடங்களை அமைத்து கொடுமைப்படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் கடந்த 16 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் நடைபெறும் வன்முறை, மோதல்களில் இதுவரை 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சிறப்பு தூதர் கோபி அனன் உருவாக்கிய சமசர திட்டங்களும் பலன் அளிக்கவில்லை. ஜனாதிபதி அசாத்துக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, சீனா நாடுகளின் முட்டுக்கட்டைகளாக சமசர திட்டங்கள் முடங்கி விடுகின்றன.
இதனால் அங்கு தொடர்ந்து நிகழும் வன்முறைக்கு நாள் தோறும் பலர் பலியாகி வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் மனித உரிமை அமைப்பு சிரியாவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது, சிரியாவில் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளான 200-க்கும் மேற்பட்டோரை சந்தித்து கருத்து கேட்டோம். அதில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இராணுவ உளவுப்பிரிவினரால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வகையான சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள்.
இவர்களை தண்டிப்பதற்காக சிரியா நாடு முழுவதும் 27 சித்ரவதை கூடங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவது, விரல் நகங்களை வெட்டி எடுப்பது, திராவகத்தை வீசி காயம் ஏற்படுத்துவது, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வது உள்பட 20 விதமான சித்ரவதை செய்கிறார்கள். இதை இராணுவம், விமானப்படை, உளவுத்துறை ஆகிய மூன்றும் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இந்த கொடுமைக்கு ஆளான இட்லிப் நகரை சேர்ந்த 31 வயது இளைஞர் கூறும் போது, கார் பேட்டரியில் இருந்து வயரை இணைத்து உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார்கள் என்றும், நிர்வாணப்படுத்தி கைவிரல் நகம், மார்பு, காதுகள் ஆகியவற்றை இரும்பு கருவியை கொண்டு நசுக்கினார்கள் என்றும் கூறினார்.
3 நாட்களாக வைத்திருந்து இந்த சித்ரவதையை செய்துள்ளனர். இந்த சித்ரவதைகளால் மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும் தெரிவித்தார்.
இவை மனித உரிமையை மீறும் கொடுஞ்செயல்களாகும். எனவே ஐ.நா பாதுகாப்பு சபை சிரியாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: on "சிரியாவில் அப்பாவி மக்களை நிர்வாணப்படுத்தி கொடுமை"
Post a Comment