இங்கிலாந்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் நாட்டில் நடைபெறும் பல்வேறு குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள கிராம பகுதிகளில் மக்களிடையே வேலையில்லா திண்டாட்டம் சமீபகாலமாக அதிகமாக உள்ளது. இதனால் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள் சிறுவயதிலேயே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து உள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து ஒரு தொண்டு நிறுவனத்தை தொடக்கி உள்ளன. இந்நிறுவனம் நாட்டில் வேலையில்லாத மற்றும் படிக்காத இளம் வயதினருக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக வரும் 3 ஆண்டுகளுக்கு வாரந்தோறும் பிரிமின்ஹம், பிரிஸ்டல், ஹூல், லீவர்புல், லண்டன் மற்றும் மான்ஸிஸ்டர் ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் பயிற்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியின் மூலம் நாட்டில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு, கிரிக்கெட் மீதான ஆர்வம் இளைஞர்கள் இடையே அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கிரிக்கெட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் வாசிம் கான் கூறியதாவது, நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை கடந்து கிராம பகுதிகளிலும் கிரிக்கெட் உணர்வு பரவ வேண்டும் என்று விரும்புகிறோம்.
இதற்காக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டியின் அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்திற்கான முழு செலவையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.
0 comments: on "இங்கிலாந்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முடிவு"
Post a Comment