ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் எதிர் வரும் ஜூலை 25ம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதில், எம்பி.க்கள் மற்றும் அனைத்து மாநில எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கின்றனர். அதே நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் வேட்பாளர்கள் தெரிவு சூடு பிடித்துள்ளது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது.
தொடக்கத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பெயர் அடிபட்டது.
ஆனால், அன்சாரி பின்தங்கிவிட பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு பெருகியது. அவருக்கு கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும் சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளும் பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போது வேட்பாளர் தெரிவு தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
சோனியாவை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்தார். ராஷ்டிரிய லோக் தள தலைவரும் மத்திய அமைச்சருமான அஜித் சிங்கும் சோனியாவை கடந்த செவ்வாய்கிழமை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து ஐ.மு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 13ம் திகதி அறிவிக்க உள்ளார்.
அப்போது, வேட்பாளராக பிரணாப் முகர்ஜியின் பெயரை சோனியா அறிவிப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
0 comments: on "காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி"
Post a Comment