கோவையில் கியாஸ் சிலிண்டர் சப்ளையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வீடுகளுக்கு சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. முன்பதிவு செய்து 40 நாட்களாகியும் சிலிண்டருக்காக இல்லத்தரசிகள் தவமாய் தவமிருக்கின்றனர். எப்படியாவது சிலிண்டர் வந்து விடாதா? என்று ஏக்கத்துடன் காத்திருப்போரிடம் மோசடி கும்பல் ஒன்று புதிய சிலிண்டர் வந்திருப்பதாக கூறி காலி சிலிண்டர்களையும், பணத்தையும் கொள்ளையடித்து வருகிறது.
அந்த வகையில் கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர், சாயிபாபா காலனி, செல்வ புரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இன்டேன் கியாஸ் சிலிண்டர் நிறுவனத்தில் இருந்து கியாஸ் வந்திருப்பதாக கூறி செல்போனில் பேசியபடியே மர்ம ஆசாமி ஒருவன் நுழைகிறான். புதிய சிலிண்டருக்கான பணத்தையும், காலி சிலிண்டரையும் பெற்றுக்கொண்டு புதிய சிலிண்டர் எடுத்துவருவதாக கூறிவிட்டு செல்லும் அந்த நபர் சற்று நேரத்தில் தலைமறைவாகி விடுகின்றார்.
சிலிண்டர் இப்போ வரும் பிறகுவரும் என்று காத்திருந்து ஏமாந்துபோன பெண்கள் கியாஸ் ஏஜென்சிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மர்ம ஆசாமிகள் காலி சிலிண்டரையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள் ளனர். இந்த தகவலை இன்டேன் வினியோகஸ்தர் அசோசியேஷன் சார்பில் சரவணன்குமார் தெரிவித்தனர்.
மேலும் அவர் கூறியதாவது:-
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்தே இந்த மோசடி நடக்கிறது. பெண்கள் கியாஸ் சிலிண்டர் போட வரும் நபர் புதிதாக இருந்தால் புதிய சிலிண்டர் மற்றும் பில் தந்தால் மட்டுமே பணத்தையும், காலி சிலிண்டரையும் கொடுக்க வேண்டும். இதோ கியாஸ் எடுத்து வருகிறேன். காலி சிலிண்டர்களை தாருங்கள் என்று கூறினால் உஷாராக இருங்கள். சந்தேக நபர்கள் வந்தால் கியாஸ் ஏஜென்சிக்கும், போலீசுக்கும் உடனே தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார்.
0 comments: on "கோவையை கலக்கும் காலி சிலிண்டர் கொள்ளையர்கள்: பெண்களே உஷார்"
Post a Comment