வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
வடகொரியா ஏவுகணைப் பரிசோதனையை நடத்த உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சீனா மற்றும் அமெரிக்காவும் வடகொரியாவின் ஏவுகணைத் தயாரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்கா, வடகொரியாவுக்கு செய்வதாக இருந்த உணவுப்பொருள் உதவிகளை செய்ய மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவின் புதிய தலைவராக கிம் ஜோங் உன் பதவி ஏற்றவுடன் பல மாற்றங்களை எதிர்பார்த்த அமெரிக்கா, தற்போது அதிர்ச்சியடைந்துள்ளது.
ஏனெனில் ஐ.நா சபையின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா தனது ஏவுகணைப் பரிசோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வடகொரியாவின் தூதுவரான ஜி ஜே ரியாங்கை, கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தித்த சீனாவின் துணை வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஸாங் ஸிஜுன் இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து சீனாவின் கவலையை அவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து சீனாவின் அமைச்சர் ஸாங் ஸிஜுன், சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இருநாடுகளுக்கும் இடையிலுள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சீனா, வடகொரியாவின் ஏவுகணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது பொருளாதாரத் தேவைகளுக்கு வடகொரியாவையே பெரிதும் நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிராக வடகொரியாவின் ஏவுகணை திட்டம் உலக நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் கடந்த மாதம் வடகொரியாவின் தலைநகரில் கையெழுத்தான பியோங்கியாங் ஒப்பந்தத்தை மீறும் விதமாக இந்த ஏவுகணைப் பரிசோதனை அமைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா இந்தப் பிரச்னையில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி மற்ற நாடுகளுடன் உள்ள நட்புணர்வை வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல ஜப்பானும் வடகொரியாவின் ஏவுகணைச் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் வடகொரியா இந்த பரிசோதனை திட்டத்தில் ஈடுபட்டால் கடந்த 2009ம் ஆண்டில் வடகொரியா ஏவிய ஏவுகணையை ஜப்பான் அழித்ததைப் போல தற்போதும் நடைபெறும் என்று ஜப்பான் எச்சரித்துள்ளது.





0 comments: on "வடகொரியா ஏவுகணையை ஏவினால் அதை அழித்து விடுவோம்: ஜப்பான் எச்சரிக்கை"
Post a Comment