பாகிஸ்தானில் நீதித் துறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் வகையில், ஊழல் வழக்கில் சிக்கியோரின் பணக் குவிப்பு குறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுத, ஆளும் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அதோடு, அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலை இந்தாண்டே நடத்தவும் முடிவு செய்துள்ளது. கடந்த 2007ல் அப்போதைய அதிபர் முஷாரப் கொண்டு வந்த தேசிய நல்லிணக்க அவசரச் சட்டம், 2009ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது.
அதோடு, அந்த சட்டத்தால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட, முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, அவரது கணவரும் தற்போதைய அதிபருமான சர்தாரி ஆகியோர் மீதான வழக்குகளை மீண்டும் துவங்க உச்ச நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், முஷாரபுக்குப் பின் சர்தாரி, கிலானி தலைமையில் அமைந்த அரசு, கோர்ட்டின் உத்தரவுகளை கிடப்பில் போட்டது.
இவ்வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்தாரி மீதான வழக்குகளை தோண்டியெடுப்பது உள்ளிட்ட ஆறு நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறினால், அதிபர், பிரதமர் இருவரையும் தகுதி நீக்கம் செய்வோம் என்றும் உத்தரவிட்டிருந்தது. வழக்கை நாளை மீண்டும் விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், நீதித் துறையிலான மோதல், நாட்டில் மீண்டும் ராணுவம் தலைமையிலான சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்று விடும் என பீதியடைந்துள்ள ஆளும் பாக்., மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி, ஊழல் வழக்குகளில் பணம் குவித்தோர் பற்றிய விவரங்களைத் தரும்படி, சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளது.
அதோடு, நவாஸ் தலைமையிலான எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு இணங்க, அடுத்தாண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலை இந்தாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அரசால் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடக்க இருப்பதைத் தடுத்து நிறுத்திவிடும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
0 comments: on "ஊழல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தான் முடிவு"
Post a Comment