|
இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ மற்றும் அசோக சக்ரா ஆகிய விருதுகளை பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பத்ம பூஷன் விருதுக்காக நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயக்குனர் மீரா நாயர், இசை கலைஞர்களான டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ்.கோபால கிருஷ்ணன் மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உட்பட 27 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். |
| பத்ம விபூஷன் விருதுக்காக மறைந்த பூபன் ஹசாரிகா, கார்டூனிஸ்ட் மரியோ டி மிரன்டா, முன்னாள் ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் உட்பட 5 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நாடகத் துறைக்கு சேவையாற்றி வரும் ‘கூத்துப்பட்டறை’ நா. முத்துசாமி, ஹொக்கி அணியின் முன்னாள் கப்டன் ஸபர் இக்பால், பெண்கள் கிரிக்கட் அணியின் கப்டன் ஜூலன் கோஸ்வாமி, வில் வித்தை வீரர் லிம்பா ராம், வைத்தியர்கள் வி.எஸ்.நடராஜன், வி. மோகன், சமூக ஆர்வலர் பி.கே.கோபால் உட்பட 77 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எல்லையில் தீவிரவாதிகளுடன் போர் செய்து உயிர் துறந்த லெப்டினன்ட் நவ்தீப் சிங்கிற்கு பாதுகாப்பு துறையின் உயரிய விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு(2011) ஓகஸ்ட் மாதம் 19ம் திகதி காஷ்மீர் மாநிலத்தின் கன்சல்வான் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் இழந்தார். நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதத்தில் பணிபுரிந்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பணிக்கு சேர்ந்த நவ்தீப், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருதுகளை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வழங்குகிறார். |





0 comments: on "2012ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு"
Post a Comment