புதுடெல்லி:நீண்ட விவாதங்களின் முடிவில், அரசியல் சாசன அந்தஸ்துடன் லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்புதல் வழங்கியது. இந்தக் கூட்டம் 70 நிமிடங்கள் நீடித்தது.
சி.பி.ஐயை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்ற அன்னா ஹஸாரேவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு வரைவு மசோதாவும், அரசியல் சட்ட திருத்த மசோதாவும் பிரதமரின் தலைமையில் நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டம் அங்கீகாரம் அளித்தது. இதைத் தொடர்ந்து மக்களவையில் வியாழக்கிழமை (டிசம்பர்-22) இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும். அத்துடன் ஆகஸ்டில் அறிமுகப்படுத்திய மசோதா வாபஸ் பெறப்படும்.
லோக்பால் மசோதாவில் சில பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரும் கொண்டுவரப்பட்டுள்ளார்.
லோக்பால் மசோதாவின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:
1.சி.பி.ஐ லோக்பால் மசோதா வரம்பிற்குள் வராது. ஆனால், லோக்பாலுக்கு அரசியல் சாசன அந்தஸ்து தருவதன் மூலம், சி.பி.ஐ.க்கு அனுப்பிவைக்கும் ஊழல் தொடர்பான வழக்குகளை லோக்பால் அமைப்பு மேற்பார்வையிட முடியும்.
2.ஊழல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையை லோக்பால் மேற்கொள்ள முடியும். இதற்கென விசாரணை இயக்குநர் நியமிக்கப்படுவார். அந்த இயக்குநரின் கீழ் விசாரணைப் பிரிவு ஒன்றும் இருக்கும்.
3.லோக்பால் 8 உறுப்பினர் கொண்ட அமைப்பாகத் திகழும். அவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒரே நேரத்தில் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய முடியும்.
4.லோக்பால் அமர்வில் தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு மொத்தமாக 50 சதவீத இடம் ஒதுக்கப்படும். அமர்வில் இடம்பெறும் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.
5.பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நீதித்துறை வல்லுநர் ஆகியோரால் லோக்பால் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
6.ஒரு குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.யை லோக்பால் கேட்டுக்கொள்ள முடியும். இந்த விசாரணை 180 நாள்களுக்குள் முடிய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கலான பிறகு லோக்பாலின் விசாரணைப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கலாம். லோக்பால் அனுப்பியுள்ள புகார்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது தனது அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையம் லோக்பாலுக்கு அனுப்ப வேண்டும்.
7.லோக்பால் வரம்புக்குள் சில பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமர் கொண்டுவரப்பட்டுள்ளார். பிரதமருக்கு எதிரான விசாரணை குறித்து முழு அமர்வும் கூடி விவாதித்து முடிவெடுக்கும். முழு அமர்வின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு பேர் ஒப்புதல் தந்தால் மட்டுமே பிரதமரை விசாரிக்க முடியும். விசாரணை பகிரங்கமாக நடைபெறாது. ஒருவேளை புகார் தள்ளுபடி செய்யப்பட்டால், அதனை பகிரங்கப்படுத்தக் கூடாது.
8.சர்வதேச உறவு, பொது ஒழுங்கு, அணு சக்தி, விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் பிரதமர் எடுத்த முடிவுகள் பற்றி லோக்பால் விசாரிக்க முடியாது.
ஹஸாரே உண்ணாவிரதம் மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதா ஏமாற்றம் தருவதாக கூறி வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக ஹஸாரே அறிவித்துள்ளார்.
நியூஸ்@தூது





0 comments: on "லோக்பால்:மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ஹஸாரே நிராகரிப்பு"
Post a Comment