தலைப்புச் செய்தி

Sunday, December 25, 2011

என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்-ஹக்கீம்


மதுரை வந்த அத்வானியின் பயணப்பாதையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், காவல்துறையினர் போலி வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி சிபிஐ இவ்வழக்கினை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டுமென நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான அத்வானி, கடந்த அக்டோபர் மாதம் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டார். மதுரையில் யாத்திரையை முடித்த அவர், கடந்த 28.10.2011 அன்று திருமங்கலம் வழியாக தென்காசி செல்ல திட்டமிட்டு இருந்தார்.
அவர் செல்ல இருந்த பாதையில் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பாலத்துக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பது காவல்துறையினரால் சர்ச்சைக்குரிய வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல்லா, இஸ்மத், ஹக்கீம் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஹக்கீம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
"விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், காவலர் மாரி ஆகியோர் என்னைக் கடுமையாக தாக்கினர். இதன்காரணமாக 3 நாட்கள் மதுரை பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். அதுபோன்று மிரட்டல் மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தை செல்போன் மூலம் படம்பிடித்தனர்.

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு புறம்பாக காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில் உள்ள சில குறைபாடுகளை மறைப்பதற்காக சிலரைத் தீர்த்துக்கட்டவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தால் தான் நியாயம் கிடைக்கும். எனவே வெடிகுண்டு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், சட்டவிரோத காவல் மற்றும் தாக்கப்பட்டது குறித்தும் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். என்னை தாக்கியதற்காக இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்."
இவ்வாறு அந்த மனுவில் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜான்வின்சென்ட் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், தமிழக காவல்துறை டி.ஜி.பி, மதுரை நகர காவல்துறை கமிஷனர், மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்-ஹக்கீம்"

Post a Comment