தலைப்புச் செய்தி

Monday, November 21, 2011

கனிமொழிக்காக ஆஜராகும் வக்கீல்கள் மாற்றப்படுவார்களா?

ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று கூறி விட்டநிலையிலும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதால் அவரது தாயார் ராசாத்தியம்மாள் கனிமொழிக்காக ஆஜராகும் வக்கீல்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். சாமர்த்தியமில்லாத இந்த வக்கீல்களை முற்றிலும் மாற்றி விட்டு கட்சி சார்பற்ற வக்கீல்களை நியமிக்குமாறு கருணாநிதியை அவர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

கனிமொழி சிறைக்குப் போய் 6 மாத காலமாகி விட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகார வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ சிறப்பு கோர்ட் முதல் உச்சநீதிமன்றம் வரை அவருக்காக ஜாமீன் மனு தாக்கல்செய்து அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் தனது ஜாமீன் கோரும் படலத்தைத் தொடங்கியுள்ளார் கனிமொழி. டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருந்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இது கருணாநிதியையும், ராசாத்தியம்மாளையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

வக்கீல்கள்தான் சரியில்லை, சிபிஐயே ஆட்சேபனை தெரிவிக்காதபோது சரியான அம்சங்களை சுட்டிக் காட்டி வக்கீல்கள் திறமையாக வாதாடாததே தனது மகளுக்கு ஜாமீன் கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்று ராசாத்தியம்மாள் கருதுவதாக தெரிகிறது. எனவே கனிமொழிக்காக ஆஜராகி வரும் திமுக வக்கீல்களை கூண்டோடு மாற்ற வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கனிமொழி வழக்கைப் பொறுத்தவரை திமுக வக்கீல்கள் குழுதான் இதைக் கவனித்து வருகிறது. அதில் முக்கியமானவர் சண்முகசுந்தரம். இவர் ஜெயலலிதாவின் முதல் ஆட்சியின்போது கொடூரமான கொலை வெறித் தாக்குதலுக்குள்ளானவர். திமுகவுக்காக அந்த அடியை அவர் அன்று வாங்கினார். எனவே சண்முக சுந்தரம் மீது கருணாநிதிக்கு தனிப் பிரியம் உண்டு, அவரை எம்.பியாக்கியும் அழகு பார்த்தவர் கருணாநிதி. எனவே சண்முகசுந்தரத்தை மாற்றுவது என்பது இயலாத காரியம் என்று அவர் ராசாத்தியம்மாளிடம் கூறி விட்டதாக தெரிகிறது.

அதேசமயம், கனிமொழிக்காக மூத்த வக்கீல்கள் ராம்ஜெட்மலானி, அல்டாப் அகமது ஆகியோர் இதுவரை முக்கிய சமயங்களில் ஆஜராகி வாதாடியுள்ளனர். ஆனால் அவர்களின் வாதங்களுக்கும் பலன் கிடைக்காமல் போய் விட்டது.

இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார். டிசம்பர் 1ம் தேதி கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் தொடர்பான அப்பீல் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எனவே இதுதொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்த ஸ்டாலின் டெல்லி வந்திருப்பதாக தெரிகிறது.

இவரது ஆலோசனைக்குப் பின்னரே வக்கீல்கள் குழுவை மாற்றுவது குறித்து கருணாநிதி முடிவெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் தர தான் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதை டிசம்பர் 1ம் தேதி விளக்க வேண்டும் என்று சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்று தனது விளக்கத்தை சிபிஐ தாக்கல் செய்கிறது. அன்றைய தினமே கனிமொழி ஜாமீன் மனு மீதான முடிவை உயர்நீதிமன்றம் அறிவிக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பதட்டம் கலந்த எதிர்பார்ப்பில் திமுக தரப்பு காத்திருக்கிறது.

அதேசமயம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்றத்திற்கு நீண்ட விடுமுறை விடப்படும். எனவே விடுமுறைக்குள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்ற தீவிரத்திலும் திமுக தரப்பு உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கனிமொழிக்காக ஆஜராகும் வக்கீல்கள் மாற்றப்படுவார்களா?"

Post a Comment