தலைப்புச் செய்தி

Thursday, November 17, 2011

இராணுவத்தளபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது!


புதுடெல்லி: உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தினர் ஈடுபடும் போது அவர்கள் செய்யும் செயல்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி வரும் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா இது குறித்து பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
தனது மாநிலத்தில் வன்முறை குறைந்துவிட்டது அதனால் இது போன்ற சட்டங்கள் இனி தேவையில்லை என்று ஒமர் அப்துல்லா பிரதமரிடம் கூறியுள்ளார் ஆனால் இந்த சட்டத்தை விலக்கிக் கொள்வது தொடர்பாக கால நிர்ணயம் பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கூடாது என்று மூத்த இராணுவத் தளபதிகள் மாநில முதல்வரிடமும் - மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளனர்.
ஆயுதப்படை சிறப்புச்சட்டம் விலக்கப்படக்கூடாது என்று இராணுவ தளபதிகள் சிலர் ஊடகங்களிடமும் சொல்லிவருகின்றனர். இது மக்கள் உணர்வுகளைத் தூண்டக்கூடிய முக்ககியமானதொரு பிரச்சனையாகும் இராணுவத்தினர் தமது கருத்துகளை அரசுக்கு நேரடியாக - ரகசியமாக தெரிவிப்பதை விடுத்து இப்படி ஊடகங்களுடன் பகிரங்கமாக பேசுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல, இது விரும்பத்தகாத விடயங்களுக்கு அடிகோலும் என்று சில ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினருக்குத் தேவையான ஆயுதக் கொள்முதல், சம்பள விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூட இராணுவத் தளபதிகளின் கருத்துக்களுக்கு அரசியல்வாதிகள் உரிய மதிப்பை கொடுக்காமல் இருப்பதால்தான் தங்களது கருத்துகளை ஊடகங்கள் மூலம் பேசும் நிலை இராணுவத் தளபதிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி தளபதி ஹரிஹரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இது போன்ற செயல்கள் ஆரோக்கியமானதல்ல என்றும் அரசியல் தலைமையும் இராணுவத்தின் தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாத அபாயம், நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்தன.
முக்கிய விடயங்கள் குறித்து இராணுவத் தளபதிகள் தமது கருத்துக்களை அதிகாரப்பூர்வமாக தன்னிடம் தெரிவிக்க வேண்டும், ஊடகங்கள் மூலம் அவற்றை வெளியிடக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி உத்திரவிட்டுள்ளதாக தெரிகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இராணுவத்தளபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது!"

Post a Comment