தலைப்புச் செய்தி

Wednesday, November 16, 2011

தூக்கு தண்டனை: விவரம் கேட்கும் நீதிமன்றம்


இந்தியாவில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் உள்பட அனைவரது விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை கொலை செய்ய முயன்றதாகக் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவரும், காலிஸ்தானை தனிநாடாக்க வேண்டும் என்று கோரிய புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என அவர் கோரியிருக்கிறார்.
அந்த மனுவுடன், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தொடர்பான மனுக்களும் உள்ளன. அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்து்க்கு மாற்றக் கோரி மூப்பனார் பேரவயைச் சேர்ந்த ஒருவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனு இன்னும் விசாரணைக்கு வராமல், புல்லர் தொடர்பான மனு மீதான விசாரணை கடந்த வாரம் துவங்கி இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.
எல்லோருக்கும் வாய்ப்பு
அப்போது, நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் மகோபாத்யாயா கொண்ட பெஞ்ச் குறுக்கிட்டு, சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதுவரை, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின விவரங்கள், அவர்கள் அனுப்பியுள்ள கருணை மனுக்களில், குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் மாநில ஆளுநர்களிடம் நிலுவையில் உள்ள மனுக்கள் எவ்வளவு, அவற்றில் எத்தனை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை நான்கு வாரங்களில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலருக்கு, கருணை மனு நிராகரிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்ற விவரம் கூடத் தெரியாது. மேலும், சிலர் உச்சநீதிமன்றம் வரை வந்திருந்தாலும், பல பேருக்கு அவ்வாறு போராடக்கூடிய அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. அதனால், அப்படிப்பட்ட அனைவரது கோரிக்கைகளையும் இந்த நீதிமன்றம் கேட்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவர்களுக்காக, மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி மற்றும் அந்தியர்ஜுனா ஆகிய இருவரையும் நீதிமன்றமே நியனம் செய்வதாகவும், நீதிமன்றம் கேட்டுள்ள விவரங்களை மத்திய அரசு அந்த வழக்கறிஞர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
மத்திய அரசு அந்த விவரங்களை சமர்ப்பித்த பிறகு, ஜனவரியில் இந்த வழக்கை மீண்டும் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை தொடர்பாக வழிகாட்டு நெறியை ஏற்படுத்துவோம் என்றும் நீதிபதிகள் அறிவித்தார்கள்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தூக்கு தண்டனை: விவரம் கேட்கும் நீதிமன்றம்"

Post a Comment