லோக்பால் விசாரணை வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படும். அதே நேரத்தில் அதன் அதிகாரம் சற்று குறைக்கப்படும். ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற் கொள்வதுடன், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கையும் நடத்துகிறது. இனி, புலனாய்வு மற்றும் வழக்கு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புலனாய்வு பணி மட்டுமே சி.பி.ஐ. வசம் இருக்குமாறு செய்யப்பட உள்ளது. வழக்கை வேறொரு அமைப்பு நடத்தும். புதிய ஏற்பாடுகளின்படி, ஊழல் புகார் எழுமானால், அந்த புகார் முதலில் லோக்பாலுக்கு செல்லும்.
அதன் மீது லோக்பால் முதல் கட்ட விசாரணையை நடத்தும். புகாரின் தன்மை, மற்றும் தகுதி அடிப்படையில், அந்த மனு பின்னர் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மீது சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளும். அந்த விசா ரணையை லோக்பால் மேற்பார்வையிடும். சி.பி.ஐ. விசாரணை முடிந்து, மேல் நடவடிக்கைக்காக அதன் பரிந்துரைகள், புதிதாக அமைக்கப்பட உள்ள வழக்குகளை நடத்தும் இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும்.
சி.பி.ஐ. அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வர்களுக்கு எதிராக வழக்கு நடத்தப்படும். எனவே, இனி சி.பி.ஐ. ஒரு புலனாய்வு அமைப்பாக மட்டுமே செயல்படும். அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு வழங்க பாராளுமன்ற குழு பரிந்துரை செய்ய உள்ளது. பாராளுமன்ற குழு மீண்டும் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கூடி விவாதிக்க உள்ளது.
அப்போது, லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதன் பிறகு முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments: on "புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது"
Post a Comment