இந்தியா எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளை தீர்க்கக் கூடிய உடனுக்குடன் முடிவெடுக்கும் தலைமை நாட்டில் இல்லை என்று விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி கூறியுள்ளார்.
பெங்களூரைத் தலைமையையிடமாகக் கொண்டு இயங்கும் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி மிகவும் மதிக்கப்படும் தொழில் அதிபராக இருக்கிறார். இந்தியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களில் இவரும் ஒருவர்.
தனது சொந்தப் பணத்தில் இருந்து கல்வித் திட்டத்தை செயல்படுத்திவரும் பிரம்ஜி சமீப காலமாக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் பிற முன்னணி பிரமுகர்களோடு இணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் நேர்மையான நிர்வாகம் குறித்தும் நாடு எதிர்கொள்ளும் சவால்களை போர்க்கால அடிப்படையில் சந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரேம்ஜி வலியுறுத்தியிருந்தார்.
தற்போது அதிக அளவில் எழுந்துவரும் ஊழல் புகார்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரேம்ஜி, நாடு சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய தலைமை தற்போது இல்லை என்றும் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாகவும், நாட்டில் நிலவும் அதிக அளவிலான பணவீக்கம் காரணமாகவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது.
அதே நேரம் காங்கிரஸ் கட்சி பிரேம்ஜியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, நாட்டின் நலனை பிரதானமாக வைத்தே அரசின் முடிவுகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.





0 comments: on "பிரச்னைகளை முடிவெடுக்கும் தலைமை நாட்டில் இல்லை-விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி"
Post a Comment