தலைப்புச் செய்தி

Thursday, November 24, 2011

மலேகான்:காணாமல் போன 3 முஸ்லிம் இளைஞர்களை தேடி கண்ணீரில் வாடும் குடும்பங்கள்


புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 9 முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என கண்டறிந்ததை தொடர்ந்து 7 பேர் விடுதலையாகி புதிய வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கும் வேளையில் இதே வழக்கில் போலீஸாரால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன முஸ்லிம்களை எதிர்பார்த்து கண்ணீரில் வாடுகின்றனர் அவர்களது குடும்பத்தினர்.
மலேகானைச் சார்ந்த ரியாஸ் அஹ்மத்(வயது 38), முனவ்வர் அஹ்மத்(வயது 36), இஷ்தியாக் அஹ்மத்(வயது 28) ஆகியோர்தாம் காணாமல் போன முஸ்லிம் இளைஞர்களாவர். இதர குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் இம்மூன்றுபேரின் பெயர்களும் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை தயார் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தாலும் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்பொழுது இவ்வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சியும் இம்மூன்று பேருக்கு என்ன நிகழ்ந்தது? என்பது குறித்து கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு ரியாஸ் மற்றும் முனவ்வரை போலீஸ் பிடித்து ஜீப்பில்  ஏற்றியதை நேரில் கண்டவர்கள் உண்டு. இஷ்தியாக் 2006 அக்டோபர் 27-ஆம் தேதி இரவில் காணாமல் போயுள்ளார். அக்டோபர் 30-ஆம் தேதி ஆயிஷா நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு ரியாஸை கொண்டுசெல்வதை ஒரு கிராமவாசி கண்டுள்ளார். குண்டுவெடிப்பிற்கு பிறகு போலீஸின் பயங்கரவாதத்தை குறித்து அஞ்சி நடுங்கிய அம்மூன்று இளைஞர்களின் குடும்பத்தின் அவர்கள் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கக்கூட துணியவில்லை.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் விசாரணை செய்துள்ளது. நள்ளிரவில் ரியாஸையும் போலீஸார் தேடி வந்தனர் என அவரது சகோதரர் நிஸாம் அஹ்மத் கூறுகிறார். அதற்கு பிறகு ரியாஸை காணவில்லை. அதற்கு பிறகு போலீஸ் அவனை தேடி வரவுமில்லை என நிஸாம் கூறியுள்ளார்.
மலேகானில் முன்னாள் சிமி இயக்கத்தின் தலைவராக இருந்தவர் முனவ்வர். அக்டோபர் 23-ஆம் தேதி தனது மாமாவின் வீட்டிற்கு சென்றார் என அவரது தாயார் ஸித்தீக்குன்னிஸா கூறுகிறார். வீட்டிலிருந்து வெளியே இறங்கிய முனவ்வரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸார் அழைத்துச் செல்வதை அண்டை வீட்டுக்காரர்கள் கண்டுள்ளனர்.
பங்களாதேஷிலிருந்து துணிகளை இறக்குமதிச் செய்து வியாபாரம் செய்து வந்துள்ளனர் இஷ்தியாக் மற்றும் அவரது சகோதரர் முஷ்தாக். முன்பு அவுரங்காபாத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் போலீஸ் இஷ்தியாக்கை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியிருந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மலேகான்:காணாமல் போன 3 முஸ்லிம் இளைஞர்களை தேடி கண்ணீரில் வாடும் குடும்பங்கள்"

Post a Comment